புதுடெல்லி: வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் மத்திய அரசு கடந்த வாரம், வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்தது.
ஏற்றுமதி வரி அதிகரிப்பால், வளைகுடா நாடுகள் இந்தியாவுக்குப் பதிலாக பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் சூழல் உருவாகும். இதனால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெங்காய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக்கில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தையில் வெங்காயத்துக்கான ஏலம் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைத் தணிக்க மத்திய அரசு வெங்காயத்தை குவிண்டாலுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாக உத்தரவாதம் அளித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கின்றன. வெங்காயத்தின் ஏற்றுமதி வரி குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை. மத்திய அரசு வெங்காயத்தை இதுவரையில் இல்லாத அளவில் ரூ.2,410-க்கு ஏற்கெனவே கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டது. இவ்வாண்டு கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய தேசியகூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி)-க்கு அறிவுறுத்தப்படுள்ளது” என்றார்.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கூறுகையில், “கடந்த ஆண்டு வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ.1200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வாண்டு மத்திய அரசு குவிண்டாலை ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு” என்று தெரிவித்தார்.