முன்னணி குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ், `சந்திரயான் 3′ பற்றிக் குறிப்பிட்டு ஒருவர் டீ ஆற்றுவதுபோல வரையப்பட்டிருந்த கார்ட்டூன் ஒன்றை டீவிட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரகாஷ் ராஜ் மீது வழக்கும் தொடரப்பட்டது.
நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் அனுப்பப்பட்டுள்ள ‘சந்திரயான் 3’ திட்டத்தைக் குறிப்பிடும் வகையில், “வாவ்… நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என கேப்ஷன் பதிவிட்டு ஒரு கார்ட்டூனைப் பதிவிட்டு இருக்கிறார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதைப் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, “வெறுப்பைப் பார்ப்பவர்களுக்கு வெறுப்புதான் தெரியும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவை ஒன்றைக் குறிப்பிட்டு கேரளா சாய்வாலாவைக் கொண்டாடும் விதமாகத்தான் இதைப் பதிவிட்டேன். நகைச்சுவையை நகைச்சுவையாகப் பாருங்கள், இல்லையெனில் உங்களிடம்தான் ஏதோ பிரச்னையிருக்கிறது” என்று விளக்கமும் அளித்திருந்தார்.
அதன்பிறகுப் பலரும், “பிரகாஷ் ராஜ், கேரளாவை விட்டு வெளியேறி வெவ்வேறு மாநிலங்களில் டீ கடைகள் வைத்திருக்கும் கேரள மலையாளிகள் (சாய் வாலாக்கள்), நிலவிற்கும் சென்று டீ கடை நடத்துவதுபோன்ற நகைச்சுவை வீடியோ ஒன்றைத்தான் குறிப்பிட்டார். மற்றபடி அவர், ‘சந்திரயான் 3’ ஆராய்ச்சியையோ அல்லது தனிப்பட்ட யாரையும் கிண்டல் செய்யவில்லை” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து இப்பிரச்னையின் தீவிரம் குறைந்தது.
இந்நிலையில் தற்போது ‘சந்திரயான் 3’ நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து, “இந்தியாவின் பெருமைக்குரிய தருணங்கள் இது… இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி… பரந்த பிரபஞ்சத்தின் மேலும் பல அதிசயங்களை அறிய இதுவே வழியாக இருக்கட்டும். இந்த தருணத்தைக் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.