Football Roundup: போராடி வென்ற ஆர்செனல்; பெல்லிங்ஹம் துணையோடு வெற்றி நடை போடும் ரியல் மாட்ரிட்!

ஐரோப்பிய கால்பந்து லீக் சீசன் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் பிரீமியர் லீக், லா லிகா, லீக் 1 தொடர்கள் தொடங்கியிருந்த நிலையில் இந்த வாரம் சீரி ஆ, புண்டஸ்லிகா போன்ற முன்னணி தொடர்களும் தொடங்கிவிட்டன.

முன்னணி அணிகளான ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, ஆர்செனல் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்கள் சீசனை சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. செல்சீ, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற அணிகள் இன்னும் தங்கள் முதல் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

பிரீமியர் லீக் – கேம்வீக் 2

இந்த வாரம் பிரீமியர் லீகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் யுனைடட். புதிய பயிற்சியாளர் ஆஞ்சி போஸ்டகாக்லூவின் தலைமியில் தங்கள் முதல் ஹோம் பிரீமியர் லீக் ஆட்டத்தை விளையாடியது ஸ்பர்ஸ். முதல் போட்டியில் பிரென்ட்ஃபோர்ட் அணிக்கெதிராக அவர்களது டிஃபன்ஸ் சற்று சொதப்பியிருந்தாலும், இம்முறை ஓரளவு சிறப்பாகவே யுனைடட் அணியை அவர்கள் கையாண்டனர்.

யுனைடட் நடுகளத்தை ஒப்பிடும்போது ஸ்பர்ஸின் நடுகளம் ஓரளவு சிறப்பாக செயல்பட்டது. அதனால் போட்டியை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தது அந்த அணி. யுனைடட்டும் அவ்வப்போது தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துக்கொள்ளத் தவறியது. கேப்டன் புரூனோ ஃபெர்னாண்டஸ் மிகவும் எளிதான ஹெட்டர் வாய்ப்பை வீணடித்தார்.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் யுனைடட்

இரண்டாவது பாதியில் ஸ்பர்ஸ் சிறப்பாக விளையாடி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. தொடர்ந்து யுனைடட் பாக்சுக்குள் நுழைந்து அட்டாக்கில் ஈடுபட்டுக்கொண்டே இருந்த பாபே மடா சார், 49வது நிமிடத்தில் கோலடித்தார். யுனைடட் எவ்வளவு முயன்றும் பதில் கோல் திருப்ப முடியாத நிலையில், 83வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது ஸ்பர்ஸ். இடது விங்கில் அவர்கள் சிறப்பாக அட்டாக் செய்ய, பென் டேவிஸ் அடித்த ஷாட் லிசாண்ட்ரோ மார்டினஸ் மீது பட்டு கோலானது. இறுதியில் 2-0 என வெற்றி பெற்றது ஸ்பர்ஸ். வழக்கம்போல் இந்த சீசன் தொடக்கத்திலும் மான்செஸ்டர் யுனைடட் அணியின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

மற்றொரு முக்கியமான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என நியூகாசில் யுனைடட் அணியை வீழ்த்தியது. கெவின் டி புருய்னா காயம் காரணமாக ஆட முடியாமல் போனதால் ஃபில் ஃபோடன் அவர் இடத்தில் ஆடினார். ஆனால் அவர்தான் அந்த அணியின் கோலுக்கும் காரணமாக அமைந்தார். அவர் கொடுத்த பாஸை இளம் ஃபார்வேர்ட் ஜூலியன் ஆல்வரஸ் கோலாக்கினார். அதற்கு மேல் கோலடிக்க முடியாமல் போயிருந்தாலும் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது மான்செஸ்டர் சிட்டி.

செவ்வாய்கிழமை அதிகாலை நடந்த போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணியோடு மோதியது ஆர்செனல். எதிர்பார்த்ததைப் போல் அட்டாகிங் கேமை ஆடினாலும் ஆர்செனல் அணியால் பேலஸின் அரணை மீறி கோலடிக்க முடியவில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காமல் போக, இரண்டாவது பாதியின் ஆறாவது பாதியில் ஆர்செனல் அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் கிளப் கேப்டன் மார்டின் ஓடகார்ட்.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் யுனைடட்

முன்னிலையில் இருந்திருந்தாலும் அந்த அணிக்கு ஒரு பெரும் இடி விழுந்தது. 67வது நிமிடத்தில் தன் இரண்டாவது யெல்லோ கார்ட் பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேறினார் டிஃபண்டர் டகஹிரோ டோமியாசு. அதனால் கிறிஸ்டல் பேலஸ் அணி தொடர்ந்து அட்டாக் செய்தது. இருந்தாலும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இறுதிவரை உறுதியாக டிஃபண்ட் செய்த ஆர்செனல் 1-0 என வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் லிவர்பூல் அணிக்கெதிராக சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருந்த செல்சீ, வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கெதிராக 3-1 என படுதோல்வியடைந்தது. வழக்கம்போல் அந்த அணியால் உருவாக்கும் வாய்ப்புகளை கோலடிக்க முடியவில்லை. அவர்களின் கடந்த சீசன் பிரச்னைகள் இம்முறையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதேபோல் கடந்த சீசன் சிறப்பாக செயல்பட்ட பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான், பிரென்ட்ஃபோர்ட் அணிகள் இரண்டாவது கேம்வீக்கில் வெற்றியைப் பதிவு செய்தன. 4-1 என இரண்டு போட்டிகளையும் வென்றிருக்கும் பிரைட்டன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

லா லிகா – கேம்வீக் 2

லா லிகாவில் நடப்பு சாம்பியன் பார்சிலோனாவுக்கு தொடக்கம் எளிதாக இருக்கவில்லை. முதல் போட்டியில் கோலடிக்காத அந்த அணி, கடீஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியிலும் 80 நிமிடங்கள் கோலடிக்கவில்லை. அந்த அணியால் பெரிய அளவு வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. உருவாக்கிய சில வாய்ப்புகளையும் அவர்களால் கோலாக்க முடியவில்லை. இருந்தாலும் கடைசி 10 நிமிடங்களில் இளம் வீரர்கள் பெட்ரி, ஃபெரான் டாரஸ் இருவரும் கோலடித்து அந்த அணிக்கு வெற்றியை உறுதியாக்கினர். அதனால் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பார்சிலோனா.

பார்சிலோனா

அதேசமயம் ரியல் மாட்ரிட் அணியோ தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறது. அல்மேரியா அணியுடனான போட்டியை 3-1 என வென்றது அந்த அணி. பென்சிமா இல்லாத அணி முன்களத்தில் தடுமாறும் என்று நினைத்திருந்த நிலையில், இந்த சீசன் வாங்கப்பட்ட மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்ஹம் அந்த இடத்தை யாரும் எதிர்பாராத வகையில்தான் நிரப்பிக்கொண்டிருக்கிறார். இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்த அவர், 2 போட்டிகளில் 3 கோல்கள் அடித்து லீகின் டாப் ஸ்கோரராகவும் திகழ்கிறார். 2 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தில் இருக்கிறது. மற்றொரு முன்னணி அணியான அத்லெடிகோ மாட்ரிட், ரியல் பெடிஸ் அணியுடன் மோதிய போட்டி கோலில்லாமல் டிராவில் முடிந்தது.

லீக் 1 – கேம்வீக் 2

பாரிஸ் செயின்ட் ஜெர்மனின் அணியின் புதிய அத்தியாயம் எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் போட்டியில் கோலடிக்காமல் டிரா செய்த அந்த அணி, இரண்டாவது போட்டியில் டொலூசே அணியுடனான போட்டியிலும் டிரா செய்தது. லூயிஸ் என்ரிக்கேவின் அணி கோலடிக்க பெரிய அளவில் தடுமாறியது. கிளப் நிர்வாகத்துடனான பிரச்னை முடிந்து அணிக்குத் திரும்பிய கிலியன் எம்பாப்பே சப்ஸ்டிட்யூட்டாக களமிறங்கி பெனால்டி மூலம் அந்த அணிக்கு கோலடித்தார். அதனால் போட்டியில் முன்னிலையும் பெற்றது அந்த அணி. ஆனால், இறுதி கட்டத்தில் சொதப்பி எதிரணிக்கு ஒரு பெனால்டியை தாரைவார்த்துக் கொடுத்தது. அது கோலானதால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே இரண்டு புள்ளிகள் மட்டும் பெற்றிருக்கும் பிஎஸ்ஜி புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகள் பெற்ற மோனகோ புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

பாரிஸ் செயின்ட் ஜெர்மனி

புண்டஸ்லிகா – கேம்வீக் 1

புண்டஸ்லிகாவில் பேயர்ன் மூனிச், பொருஷியா டார்ட்மண்ட் அணிகள் வெற்றியோடு தங்கள் சீசனைத் தொடங்கின. வெர்டர் பிரமென் அணியோடு மோதிய பேயர்ன், 4-0 என அந்தப் போட்டியை வென்றது. அந்த அணிக்காக முதல் புண்டஸ்லிகா போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் என தன் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். புள்ளிப் பட்டியலில் அந்த அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 5-0 என விஎஃப்எல் போகம் அணியை வீழ்த்திய எஃப்சி ஸ்டட்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. கோல்ன் அணியோடு மோதிய பொருஷியா டார்ட்மண்ட் 1-0 என போராடி வென்றது. அந்த அணியின் இளம் ஃபார்வேர்ட் டான்யல் மாலன் 88வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

சீரி ஆ – கேம்வீக் 1

இந்த வாரம் தொடங்கிய சீரி ஆ தொடரில் பெரும்பாலான முன்னணி அணிகள் வெற்றியுடனேயே தொடங்கியிருக்கின்றன. யுவன்டஸ், நேபொலி, இன்டர் மிலன், ஏசி மிலன், ஃபியோரென்டினா, அடலான்டா என அனைத்து டாப் அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றன. ரோமா மட்டும் தங்கள் போட்டியை டிரா செய்தது. சல்ர்னிடானா அணியுடனான போட்டியை 2-2 என டிரா செய்தது ரோமா. அதற்கே அந்த அணி மிகவும் போராடவேண்டியதாக இருந்தது. அந்த அணியின் ஃபார்வேர்டுகள் டேமி ஆபிரஹாம், பாலோ டிபாலா இருவருமே காயமடைந்திருந்ததால் அந்த அணி பெரிதும் தடுமாறியது. இருந்தாலும் மற்றொரு ஸ்டிரைக்கர் ஆண்ட்ரே பொலோட்டி 2 கோல்கள் அடித்து அந்த அணியைக் காப்பாற்றினார். ஜெனோவா அணியை 4-1 என வீழ்த்திய ஃபியோரன்டினா புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.