ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ் சமயங்களிலும் அத்திரைப்படங்களின் வசூல் குறித்தான வாதங்கள் இணையத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன.
அதுதொடர்பாக தயாரிப்பாளர், திரைப்பட விமர்சகர், விநியோகஸ்தர் எனப் பன்முகங்கொண்ட தனஞ்செயனை சந்தித்துப் பேசினோம். ‘கங்குவா’, ‘தங்கலான்’ திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனின் சி.இ.ஓ-வாகவும் இயங்கிவருகிறார்.
கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கிய அவர், “தற்போது வரை ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.500 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது. அதனை கூடியவிரைவில் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே வெளியிடும். இந்த வசூல் சாதனை உலகளவில் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வசூல் குறித்து விசாரித்தேன். அங்கு புதிய படங்கள் வெளியாகியிருந்தாலும் வசூலில் ‘ஜெயிலர்’தான் முன்னிலை வகிக்கிறது.ரூ.500 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய சாதனை. இதற்கு முன் 2.0 திரைப்படம் இந்த வசூலை எட்டியது. 2.0 திரைப்படம் இந்தியில் மட்டும் 120 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், ஜெயிலர் இந்தியில் ரூ.10 கோடிதான் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் அதிக அளவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூல் செய்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
ஊடகங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள்தான் முக்கிய காரணம். ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பலர் ‘யார் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்கிற வாதத்தைத் தொடங்கிவிட்டார்கள். இது ரஜினி ரசிகர்கள் பலருக்கு ஆதங்கத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பலர் குடும்பத்துடன் சென்று பார்க்கத் தொடங்கினார்கள். இதே போன்ற சம்பவம் ‘பாபா’ திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு நிகழ்ந்தது. அதனைக் களைந்து 2005-ல் ‘சந்திரமுகி’ திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. அதற்கு ரஜினி,”நான் குதிரை, யானை அல்ல. வீழ்ந்தால் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கிவிடுவேன்” எனக் கூறினார்.
”இதுவரை தமிழ் சினிமாவில் அதிக அளவில் வசூல் நிகழ்த்திய திரைப்படங்கள் என்று எடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் ’2.0’ திரைப்படமும் அடுத்தடுத்து ‘PS-1’ திரைப்படமும் ‘விக்ரம்’ திரைப்படமும் இருக்கின்றன. இப்போது ‘ஜெயிலர்’ திரைப்படம் ‘PS -1’, ‘விக்ரம்’ திரைப்படங்களின் வசூலைவிட முந்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஒரு ரஜினி படத்திற்கு அடுத்தபடியாக ரஜினி படம்தான் இருக்கிறது. எந்த சாதனையும் நிரந்தரமானதல்ல. இப்போது ‘ஜெயிலர்’ சாதனையை ‘லியோ’ திரைப்படம் முந்தப்போகிறதா, ‘இந்தியன் 2’ திரைப்படம் முந்தப்போகிறதா என்பதைக் கணிக்க முடியாது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/06/WhatsApp_Image_2023_02_03_at_6_41_59_PM.jpeg)
மக்களுக்குப் பிடித்திருந்தாலே ஒரு திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகப்பெரிய உச்சநட்சத்திரங்கள் இல்லையென்றாலும் அத்திரைப்படம் மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தது; அதிக அளவில் வசூலும் செய்தது” என்றவர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள ஒரு மென்பொருளை வடிவமைத்துத் தமிழக அரசிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் சமர்ப்பித்திருக்கிறார். இரண்டு வருடங்களாக அது எந்த நகர்வையும் பெறவில்லை என ட்வீட் செய்திருந்தார். அதுகுறித்தான கேள்விக்கு அவர், “இன்று வரை எக்ஸெல் ஷீட்டில்தான் என்ட்ரி செய்கிறார்கள். இதனை ஆட்டோமேட்டடாக மாற்ற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் அந்த மென்பொருளை வடிவமைத்திருந்தோம். ‘ஏ.பி.ஐ இண்டகிரேஷன்’ மூலமாக ‘புக் மை ஷோ’ செயலியுடன் இணைத்து இந்த மென்பொருள் இயங்கும். டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் முடிந்த பிறகு ஆட்டோமேட்டிக்காக முழு விவரத்தையும் பதிவு செய்துவிடும்.
ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த விவரத்தில் ஒரு ரூபாய் தவறினாலும் நஷ்டம்தான். அதுபோன்று நடைபெறாமல் தடுப்பதே எனது கனவு. தமிழக அரசு கூறியதைப் போல எந்தத் திரைப்படத்திற்கும் விடியற்காலைச் சிறப்புக் காட்சிகள் திரையிடுவதில்லை. அது ஒரு நல்ல செயல்தான். ‘ஜெயிலர்’, ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்களும் எந்தச் சிறப்புக்காட்சிகளும் இன்றிதான் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு கன்டன்ட் சரியாக அமைந்திருந்தால் அது தியேட்டரிலோ, டிஜிட்டலிலோ நிச்சயம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுவிடும்.
எந்தவிதமான கன்டன்ட் வெற்றியடையும் என எவராலும் கணிக்க முடியாது. மக்களுக்கு கனெக்ட்டானால் அது வெற்றித் திரைப்படம்தான். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ‘போர்த்தொழில்’, ‘குட் நைட்’ திரைப்படங்களைக் கூறலாம். அடுத்தாக மணிகண்டன் போன்ற நடிகர்களின் ஓப்பனிங் சிறப்பாக இருக்கும்.”
மேலும், தங்கலான், கங்குவா திரைப்படங்கள் குறித்தான கேள்விக்கு விடையளித்தார் அவர், “தங்கலான் திரைப்படத்தின் ‘போஸ்ட் புபொடக்ஷன்’ வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இத்திரைப்படத்திற்கான ரிலீஸ் வேலைகளை அக்டோபர், நவம்பர் மாதத்தில்தான் தொடங்கப்போகிறோம். ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் நடைபெற்றுவருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/0a81251c-a587-4d83-8df6-9c15098f7779.jfif.jpeg)
இதன் பிறகு வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. படத்திற்காக அவர் தயாராவதை சமீபத்தில் வெளியான ஸ்டில்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.