தமிழகத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்தது. இடப்பற்றாக்குறை மற்றும் நெரிசல் காரணமாக புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றத்தை கட்டுவதாக 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி அறிவித்தார். இதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகவேகமாக நடைபெற்றன. 2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது.
ஆனால், 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தலைமைச் செயலக கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார். அத்துடன், தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டடம் பழையபடி கோட்டையிலேயே இயங்கும் என்றும் கூறினார். தற்போது புதிய தலைமைச் செயலக கட்டடம் மருத்துவமனையாக மாறி இயங்கி வருகிறது.
இதனிடையே கொரோனா கால கட்டத்தில் இட நெருக்கடி காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில்
ஆட்சிக்கு வந்த நிலையில், தலைமைச் செயலகம் மாற்றப்படுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கல் சங்கமும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், அரசு தரப்பில் இருந்தும் தலைமைச் செயலக மாற்றம் தொடர்பாக எந்த விதமான ரியாக்ஷனும் காட்டப்படவில்லை.
இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேட்டியளித்தபோது இதுபற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “இந்த கேள்விக்கு 500 முறைக்கு மேல் நான் பதில் சொல்லிவிட்டேன். ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு முன்பு பன்னோக்கு மருத்துவமனை என்று இருந்ததே தவிர பல வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளை செய்துகொடுத்துள்ளோம். மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் சிகிச்சைக்காக வந்தோரின் எண்ணிக்கை 400 – 500. இப்போது 1500 முதல் 2000 பேர் வரை வருகிறார்கள்.
இதய அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டண்ட் பொருத்தும் பணிகள் இங்கு அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதுவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் 11 உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. மருத்துவத்தின் தேவையும், மருத்துவ சேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆகவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை எந்த சூழலிலும் தலைமைச் செயலகமாக மாற்றப்படாது. எடப்பாடி பழனிசாமியிடம் இதை தைரியமாக சொல்லலாம்” என உறுதியளித்தார்.