சந்திரயான் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.615 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனைய நாடுகள் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கு செலவிடும் தொகையை ஒப்பிட இது மிகக் குறைவானது ஆகும். அதனாலேயே, சந்திரயான் திட்டம் சர்வதேச அளவில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில், தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் ‘லூனா 25’ திட்டத்துக்கான செலவு ரூ.1,600 கோடி ஆகும். அதுபோல, சீனாவின் ‘சேஞ்ச்’ திட்டத்துக்கான செலவு ரூ.1,752 கோடி ஆகும். இந்தத் திட்டங்களுக்கு ஆன செலவில் மூன்றில் ஒரு பங்குதான் சந்திரயான் திட்டத்துக்கு செலவாகியுள்ளது.
இந்நிலையில், சந்திரயான் திட்டத்துக்கான செலவை பலரும் திரைப்படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இந்தியப் படமான ‘ஆதிபுருஷ்’, ஹாலிவுட் படமான ‘இன்டர்ஸ்டெல்லார்’ உடன் சந்திராயன் திட்டத்தை பலரும் ஒப்பீடு செய்கின்றனர். தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இவ்வாண்டு வெளியான வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தின் பட்ஜெட் ரூ.700 கோடி என்று கூறப்படுகிறது. கிரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.1,368 கோடி ஆகும்.
‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் பட்ஜெட்டுடன் சந்திரயான் திட்டத்தை ஒப்பீடு செய்யும் ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இந்தியாவுக்கு பலன் தரும் திட்டம் என்று பொருள்படும் வகையில் பதிலிட்டுள்ளார்.