காவிரியில் கூடுதல் தண்ணீர் கேட்பதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி கர்நாடக தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
நடுவர் மன்ற தீர்ப்பின்படி, குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்காக, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் குறிப்பிட்டுஉள்ளதாவது:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், இம்முறை 42 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இது குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டத்திலும் விளக்கப்பட்டது. ஆனால், சாதாரண மழைக் காலம் போன்று, தண்ணீர் விடும்படி தமிழகம் கேட்கிறது.
அதாவது, 36.76 டி.எம்.சி., தண்ணீர் கேட்கிறது. அணைகளிலும் தண்ணீர் குறைவாகவே உள்ளது. காரணமே இல்லாமல் மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அணை கட்டினால், இதுபோன்று கஷ்ட காலத்தில் தமிழகத்துக்கு கூடுதல் உதவியாக இருக்கும். அணைகளில் உள்ள தண்ணீர் கர்நாடகாவுக்கு போதாது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும். பெங்களூரு நகரின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.
கர்நாடகா தரப்பில் ஆகஸ்ட், 22ம் தேதி வரை, 26 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 69 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் 1.85 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மாநிலத்தின் நலன் காக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்படும். காவிரி நதி நீர் விஷயம் தொடர்பாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கினால், அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று முறையிடுவோம்.சிவகுமார், கர்நாடகா துணை முதல்வர், காங்.,
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்