மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி உலகப்பிரசித்தி பெற்றது. மலையடிவாரத்திலுள்ள குடவரைக்கோயிலான சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இதில், குழந்தைகள், முதியவர்கள் என எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் வசதி வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே நேற்று திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைக்கும் நிறுவனமான ஐடிகாட் எனும் தனியார் நிறுவனத்தினர் நேற்று ‘டோபோ ‘சர்வே’ பணியில் ஈடுபட்டனர். சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர். இதுதொடர்பாக பக்தர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்துக் கேட்டறிந்தனர்.