தேர்தல் முறைகேடு வழக்கு; நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர்!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் செய்து, தேர்தல் வெற்றியை ஜோ பைடன் அபகரித்துக்கொண்டார் என ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், 2021 ஜனவரி 6-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குச் சான்றளிக்கும் நிகழ்ச்சி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

டொனால்டு ட்ரம்ப்

ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல், ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாகவும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகவும் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் கலவரம் தொடர்பான வழக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்திலும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்திலும் நடந்தது.

இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் உள்ளிட்ட 17 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மிஸ்டி ஹாம்ப்டன், டேவிட் ஷாஃபர், கேத்தி லாதம், ரே ஸ்மித், கென்னத் செஸ்ப்ரோ, ஜான் ஈஸ்ட்மேன், ஸ்காட் ஹால் உட்பட பல்வேறு நபர்கள் வெவ்வேறு நாள்களில் சரணடைந்தனர்.

ருடால்ப் கியுலியானி

இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளுக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடால்ப் கியுலியானி மீது, பொய்யான அறிக்கைகளை வழங்குதல், பொய் சாட்சியம் கோருதல், மோசடியான ஆவணங்களை உருவாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று அட்லான்ட்டா காவல் நிலையத்தில் ருடால்ப் கியுலியானி சரணடைந்தார். இவர் 1,50,000 அமெரிக்க டாலர் பிணையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தொகையை அவர் வழங்கிய பிறகு பெயிலில் விடுவிக்கப்பட்டார். இது குறித்துப் பேசிய ருடால்ப் கியுலியானி, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஏனென்றால், இந்த வழக்கு எங்கள் வாழ்க்கை முறைக்கான போராட்டம். என்மீது மட்டுமல்ல, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதும் வைத்த இந்தக் குற்றச்சாட்டு ஒரு கேலிக்குரியது. எங்கள்மீது தொடரப்பட்ட தாக்குதல் என்றே கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் `விரைவில் ஆஜராகுவேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டால் குறைந்தது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.