கோவை: ஜனவரியில் பாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று (ஆக.24) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரியில் பாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும். நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிளும், குர்ஆனும் அதிகமாக பரிசாக வந்துள்ளன. பாஜக மீதான பிம்பம் உடைந்து, அனைவருக்கும் உழைக்கும் கட்சியாக உள்ளது. இந்த நடைபயணத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் நடந்துள்ளார்கள்.
நீட் தேர்வை பொருத்தவரை தற்போது ஆளுநரின் பங்கு ஏதும் இல்லை. குடியரசு தலைவர்தான் முடிவு எடுப்பார். இவர்கள், கோரிக்கையை குடியரசு தலைவரிடம்தான் வைக்க வேண்டும். ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும்.
இதுகுறித்து பதில் சொல்ல திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?. காவிரி பிரச்சினைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதில், இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதல்வர் ரசிக்கிறார். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது திமுகவின் முதல் கடமையாக உள்ளது. ஒவ்வொரு சமுதாயத்தைப் பற்றியும் அவர்கள் பேசி வருகின்றனர்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லாருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம். அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு முக்கிய மாநாடு. மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.