புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் தொகுதியில் அமைச்சர்கள் அத்துமீறல்: திமுக புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிகளில் அவர்களுக்கு தெரியாமல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அமைச்சர்கள் மீது பேரவைத் தலைவரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.

புதிய அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு நிலைகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதியில் அவருக்கு தெரியாமலேயே நலத்திட்ட உதவிகள் வழங்குவதும், உறுப்பினர்களை அழைக்காமல் அரசு விழா நடத்துவதும் தொடர்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிகளில் ஆளும் அமைச்சர்களின் அத்துமீறிய செயல்கள் மக்களுக்கு எந்தவித நன்மையும் விளைவிக்காது என்று எதிர்க்கட்சியான திமுக எம்எல்ஏக்கள் பேரவைத்தலைவரிடம் புகார் தெரிவித்து கடிதம் தந்துள்ளனர்.

புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோருடன் சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திடம் இன்று அளித்த மனு: ”ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை பெறச்செய்வதும், அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதும் பேரவைத் தலைவராகிய தங்களின் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை அமைந்த அரசு எதுவாக இருந்தாலும் அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கட்சி பாகுபாடு இன்றி உரிய மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுவது தொடர்ந்து வந்துள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட எந்த நிகழ்ச்சியும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்றாலும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இடம் அளிக்கப்படுவது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். சட்டப்பேரவை உறுப்பினருக்கு அளிக்கப்படும் அந்த முக்கியத்துவம் என்பது ஜனநாயகத்தில் தொகுதி மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகும். சமீப காலமாக இந்த மரபு மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் சில அமைச்சர்களின் நெருக்கடியால் நிகழ்வதால் கடந்த கால மாண்புகள் குலைக்கப்படுகின்றன.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து பணியாற்றுவதுதான் ஜனநாயகம் ஆகும். இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிகளில் ஆளும் அமைச்சர்களின் அத்துமீறிய செயல்கள் மக்களுக்கு எந்தவித நன்மையும் விளைவிக்காது. இந்த புதிய அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு நிலைகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதியில் அவருக்கு தெரியாமலேயே நலத்திட்ட உதவிகள் வழங்குவதும், உறுப்பினர்களை அழைக்காமல் அரசு விழா நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது நடக்கும் சம்பவங்கள் காலம்காலமாக நாம் பின்பற்றி வரும் ஒழுங்கு முறைக்கு எதிரானது.

இதுபோன்ற நிலைமை இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் காக்கப்படவும், ஜனநாயக மாண்பு நிலைநிறுத்தப்படவும், மரபு மீறிய செயல்கள் தடுக்கப்படுவதும் தங்களுடைய பொறுப்பாக உணர்கிறேன். ஆகவே, அதற்கான முயற்சிகளை தாங்கள் முன்னெடுத்து அரசு செயலர், துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர்களை முறைப்படுத்த வேண்டும்” எனறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.