செல்வமணி இயக்கிய திரைப்படங்களில் வித்தியாசமானது ‘மக்கள் ஆட்சி’. பொலிட்டிக்கல் திரில்லர் என்றாலும் படம் முழுவதும் தெறிக்கும், சூடும் சுவையுமான வசனங்கள்தான் இந்தப் படத்தின் பெரும்பலம். தமிழக அரசியலில் இதுவரை நிகழ்ந்துள்ள பல்வேறு சம்பவங்களை, அரசியல் ஆசாமிகளை இந்தப் படத்தில் சரமாரியாகக் கிண்டலடித்துள்ளார்கள். அதிலும் கறுப்புச் சால்வையைத் தோளில் எப்போதும் வைத்துள்ள ஒரு கேரக்ட்டரின் பெயர் சை.கோ. இதற்கு நேரடியாகவே பெயரைச் சொல்லியிருக்கலாம். பட்டாசு போல் தெறிக்கும் வசனங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையையும் இணைத்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். மணிவண்ணன் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்திற்கு நிகரானதாக இதைச் சொல்லலாம்.
ஒரு சராசரி நபர் எப்படி ஒரு மாநிலத்திற்கு முதல்வர் ஆகிறார் என்பதுதான் இதன் ஒன்லைன். ஷங்கரின் ‘முதல்வன்’ படத்திற்கு முன்னோடி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். முதல்வனில் அர்ஜுன் நேர்மையான ஊடகவியலாளர். இதில் சி.எம். ஆகிறவர் அதற்கு நேர்மாறான ஆசாமி.
சென்ட்ரல் ஜெயில் டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சேதுபதி ஒரு சில்லறைக் குற்றவாளி. சிறைக்குள் மது கடத்துவது, பொய்ச் சாட்சி சொல்வது போன்ற உதிரிக்குற்றங்களைச் செய்பவன். பிழைப்பிற்காகப் பிராமண வேஷத்தில் முதலமைச்சரின் மணிவிழாவிற்குச் செல்கிறான். அரசியல் பகை காரணமாக அங்கு சி.எம். கொல்லப்படுகிறார். அந்தப் பழி சேதுபதியின் மீது விழுகிறது. ஒரு லாரியில் ஏறித் தப்பிக்கிறான். அந்த லாரி யாருமில்லாத இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. சமாளித்துக் கொண்டு சேதுபதி எழுந்து பார்க்க லாரி முழுவதும் பெட்டி பெட்டியாகப் பணம்.
சேதுபதிக்கு அடைக்கலம் தந்திருக்கும் ஐயர், அந்தப் பணத்தை எப்படி மாட்டிக் கொள்ளாமல் வெள்ளையாக்குவது என்று ஐடியா தருகிறார். அதன்படி ‘மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்கிற அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார்கள். மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகச் சேதுபதியின் மீது பொய் துப்பாக்கியால் சுடலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே துப்பாக்கி வெடிக்கிறது. அனுதாபம் காரணமாக வாக்குகள் குவிந்து சேதுபதி மாநிலத்தின் முதலமைச்சராகிறார். பிறகு நிகழும் கலாட்டாக்கள்தான் படம்.
சேதுபதியாக மம்மூட்டி. தமிழக அரசியல் பின்னணி தெரியாததால் நடிக்க ஒப்புக் கொண்டாரோ என்று தெரியவில்லை. தமிழ் நடிகராக இருந்தால் பெரும்பாலோனோர் நிச்சயம் தயங்கியிருப்பார்கள். அந்தளவிற்குத் தமிழ்நாட்டின் அரசியல் சம்பவங்களை வைத்துப் பந்தாடியிருக்கிறார்கள். அது சிரிப்போ, துயரமோ, சென்டிமென்ட்டோ, மம்மூட்டியின் நடிப்பு ஒரு குறிப்பிட்ட மீட்டரில் மட்டுமே அசையாமல் இருக்கும். இதிலும் அப்படியே. உதிரிக்குற்றவாளியாக இருந்து சூழல் காரணமாக முதலமைச்சர் ஆகும் ரோலில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
காதலித்த பெண்ணை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை சேதுபதி திருமணம் செய்ய வேண்டி வரும். அதற்குக் காதலியேதான் காரணமாக இருப்பார். அப்போது ‘சத்தியமா நான் தப்பு பண்ணல…’ என்று மறுபடியும் மறுபடியும் உருக்கமாகச் சொல்லுமிடத்தில் மம்மூட்டி அபாரமாக ஸ்கோர் செய்திருப்பார். மம்மூட்டியின் காதலியாக ரோஜா. கவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக தன் காதலை விட்டுத் தந்து ஆவேசமாக வாதாடும் போது ரோஜாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும். தவறான புரிதல் காரணமாக மம்மூட்டியைப் பழிவாங்கும் பாத்திரம் என்றாலும் கவர்ச்சிக்காகவே ரஞ்சிதா சேர்க்கப்பட்டிருப்பது வெளிப்படை.
சேதுபதியின் அரசியல் ஆலோசகராக ஆர்.சுந்தர்ராஜனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. கட்சிக்குப் பெயர் வைக்கும் போது “கழகம்…ன்னு வராம கட்சியோட பெயர் இருக்கக்கூடாது” என்று ஆலோசனை சொல்வது முதல் இவர் பேசும் பல வசனங்கள் அதிரடிதான். அரசியல்வாதிகளின் அலப்பறைகளுக்கு அடிபணிந்து “இன்னொரு எமர்ஜென்சி வராமயா போயிடும். அப்ப உங்களை வெச்சுக்கறேன்” என்று உள்ளுக்குள் பொருமும் காவல் அதிகாரி ‘வால்டர் வடிவேல்’ பாத்திரத்தில் தியாகு நன்றாக நடித்திருந்தார்.
தோளில் கறுப்புத் துண்டு, சை.கோ… இவரு அவருல்ல?
தோளில் கறுப்புத் துண்டுடன் ‘சை.கோவிந்தசாமி’ என்கிற பாத்திரத்தில் லிவிங்ஸ்டன். இதர பாத்திரங்களையாவது ‘யார் அசலாக இருக்கும்?’ என்று சிறிதாவது யோசிக்கும்படியாக இருந்தது. ஆனால் இந்தப் பெயர் அப்பட்டமாக ஒருவரைக் குறிக்கும்படி இருந்தது. ‘தலைவா… உனக்காக உயிரையும் கொடுப்பேன்’ என்று முதலமைச்சரிடம் சொல்லி விட்டு இன்னொரு பக்கம் அவரையே போட்டுத் தள்ளி அடுத்த முதலமைச்சராவதற்காகப் படாத பாடு படுவார். “இவன்லாம் சி.எம்மா… நான் ஒத்துக்க மாட்டேன்” என்று லிவிங்ஸ்டனுடன் மல்லுக்கட்டும் போட்டி ஆசாமியாக மன்சூர் அலிகான் தன்னுடைய ஸ்பெஷல் அலப்பறையுடன் நடித்திருந்தார்.
சீனியர் முதலமைச்சராக ராதாரவி. பெண்கள்தான் இவரது பலவீனம். அரசாங்கத்தின் பின்னணியில் இயங்குகிற தொழிலதிபர் ரங்காச்சாரியின் ‘ஆள்’ என்று தெரிந்தும் ஐஸ்வர்யாவின் மீது ஆசைப்பட்டுச் சென்று பகையைச் சம்பாதித்து குத்துவிளக்கு நெருப்பில் சாகிறார். ரங்காச்சாரியின் ஆளாக வரும் இளம் வயது ஐஸ்வர்யா, பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கிறார். பாட்டு முடிந்ததும் பரிதாபமாகச் செத்துப் போகிறார். ரங்காச்சாரியாக ஆனந்தராஜ் தனது வழக்கமான பாணியில் வில்லத்தனம் செய்கிறார். அரசாங்கத்தையே ஆட்டி வைக்கும் பணக்காரத்தனத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
கோடிக் கணக்கான பணம் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகி விட முடியுமா என்பது போன்ற லாஜிக் மீறல்கள் எழுந்தாலும் அப்படி பலரும் முதலமைச்சர் ஆக ஆசைப்படும் அபத்தத்தைத்தான் படத்தில் கிண்டலடித்திருக்கிறார்கள். கலைமணி எழுதிய கதை சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும் அதை மேலும் சுவாரஸ்யமாக ஆக்குவது சந்தேகமின்றி லியாகத் அலி கானின் வசனங்கள்தான். (இணை வசனம்: ஈ.ராமதாஸ்). செல்வமணியின் பல திரைப்படங்களை ஸ்பெஷல் ஆக்கியது லியாகத்தின் வசனங்கள்தான். ‘மக்கள் ஆட்சி’ படத்தில் இவர் எழுதியிருக்கும் அரசியல் கிண்டல்கள், பகடிகள், விமர்சனங்கள் என்பது படம் முழுவதும் சரவெடிகளாகவும் ராக்கெட்டுகளாகவும் அணுகுண்டுகளாகவும் வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. தனது திறமையான வசனத்தின் மூலம் தமிழக அரசியல் கலாசாரத்தையும் ஊழலையும் மக்களின் அறியாமையையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
படம் முழுவதும் வெடிக்கும் சரவெடி வசனங்கள்
கோவிலின் வைர வேல் திருட்டு, கழுத்தில் குண்டடிபட்டதை போஸ்டராக ஒட்டி அனுதாப ஓட்டுக்களை அள்ளுவது, மேடையில் ஏறி எதிர்க்கட்சிக்காரனின் தனிப்பட்ட விஷயங்களைத் திட்டுவது, அரசாங்கத்தின் பின்னால் நின்று இயக்கும் செல்வந்தர்கள் என்று அரசியல் கலாசாரத்தின் அத்தனை மோசமான பக்கங்களையும் சீரியஸாகவும் சிரிப்பாகவும் விமர்சித்திருக்கிறார்கள்.
‘ஒவ்வொரு அமைச்சரும் தாங்கள் வாங்கும் ஊழல் பணத்தில் பாதியை முதலமைச்சருக்குத் தந்து விட வேண்டும்’… என்கிற நடைமுறையை அறியும் சேதுபதி, அனைத்து எம்.எல்.ஏக்களையும் பாரபட்சமின்றி அமைச்சர் ஆக்குவதென்று முடிவு செய்துவிடுவார். குடிபோதையில் ஒவ்வொருவரையாக அவர் அழைக்க அனைவரும் காலையில் சி.எம்.வீட்டு வாசலில் கூடிவிடுவது ரகளையான காட்சி. இந்த வரிசையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவும் கவர்னரும் கூட இருப்பது அநியாயமான குறும்பு.
ஊழல் பணத்தில் திளைக்கும் முதலமைச்சர் சேதுபதியின் மனதை மாற்றுவது ஒரு மரணம்தான். தன் தலைவனை எதிர்க்கட்சிக்காரர்கள் திட்டுவதைப் பொறுக்க முடியாத ஒரு விஸ்வாசமான தொண்டர் தீக்குளித்து இறந்து விடுவதை அறியும் சேதுபதி, அரசியல் தலைவர்கள் மீது அப்பாவி மக்கள் எத்தனை நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்து நேர்மையானவராக மாறிவிடுவார். அதற்குப் பிறகு அவர் எடுக்கும் அதிரடி ஆக்ஷன்கள் பட்டாசு ரகம்.
வரிகளைக் குறைப்பது பற்றி அதிகாரிகளைக் கூட்டி அவர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் நடக்கும் விவாதம் முக்கியமான காட்சி. அப்பாவி மக்களைத் துன்புறுத்தி குற்றவாளிகளோடு கூட்டணி வைத்திருப்பது பற்றி காவல்துறை அதிகாரிகள் மீட்டிங்கில் சேதுபதி அனல் பறக்க பேசுவதும் நல்ல காட்சி. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, தனது துறையில் நடக்கும் ஊழல்களையும் குற்றங்களையும் அங்கு புட்டு புட்டு வைப்பதெல்லாம் நடைமுறையில் உண்மையாகவே இருக்கிறது.
நேர்மையாக மாறி விடும் சேதுபதியைப் பழிவாங்குவதற்காக மருத்துவ ஊழலை அவர் மீது திருப்பி விடுவார் ரங்காச்சாரி. இதனால் பல உயிர்கள் பலியாகும். கோபம் கொள்ளும் மக்கள் ‘முதலமைச்சர் ஒழிக’ என்று கத்தி ஊர்வலம் செல்வார்கள். பிறகு உண்மை அறிந்ததும் ‘வாழ்க’ என்று கத்துவார்கள். “இப்படி வாழ்க… ஒழிக…ன்னு கோஷம் போட்டு வாழ்க்கையைத் தொலைக்காதீங்க. ஒரு தலைவனைக் கண்மூடித்தனமா நம்பி நாட்டை ஒப்படைக்காம, சிந்திச்சு தெளிவா ஓட்டு போடுங்க” என்று இறுதியில் சேதுபதி சொல்வது முக்கியமான, ஆனால் மக்கள் இன்னமும் பின்பற்றாமல் இருக்கும் உபதேசம்.
லியாகத் அலி கானின் தீப்பொறி வசனங்களோடு செல்வமணியின் இயக்கமும் பிரமாண்ட காட்சிகளை உள்ளடக்கிய மேக்கிங்கும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன. க்ளைமாக்ஸில் குற்றவாளிகள் மீது சேதுபதி நடத்தும் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் அப்பட்டமான சினிமாத்தனம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு அப்போதைக்கு இனிமையாக இருந்தாலும் எந்தவொரு பாடலும் பிற்பாடு நினைவில் இல்லாமல் போகின்றன. எம்.வி.பன்னீர்செல்வத்தின் கேமரா காட்சிகளின் பிரமாண்டத்தை நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறது. ‘மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை ஏற்படுத்துவதுதான் என் லட்சியம்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனத்தோடு படம் ஆரம்பிக்கிறது. ஆனால் படத்திற்குள் அவரையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த அரசியல் திரைப்படங்களைப் பட்டியலிட்டால் அதில் ‘மக்கள் ஆட்சி’ உறுதியாக இடம்பிடிக்கும். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சம்பவங்களும் சாட்டையடி வசனங்களும் இடம் பெற்றிருக்கும் இந்தப் படத்தை இன்றும் ரசித்துப் பார்க்கலாம்.