வாழ்க்கையில் எந்த ஆர்வமும், பிடிப்பும் இல்லாமல் இருக்கும் ஜீவா (ஜி.வி.பிரகாஷ் குமார்) தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் தற்போது பிரபல பாடகராக இருக்கும் அவரது பள்ளிப் பருவத்துக் காதலியான செந்தாழினியின் (கௌரி ஜி.கிஷன்) பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் அவர் தனக்குப் பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் குறித்து நினைவுகூர்கிறார். அதை எழுதியவரைத் தேடி வருவதாகவும் சொல்கிறார். ஜீவாதான் அதை எழுதியது என்பதால் அவர் அதை செந்தாழினிக்குத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுக்கிறார். அந்த நேரத்தில் அவர் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள, அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் அவரை ஒரு ஆல்டர்நேட் ரியாலிட்டிக்குள் தள்ளுகிறது. மல்டிவெர்ஸில் (இணை பிரபஞ்சம்) மாட்டிக்கொண்ட ஜீவா தன் காதலை ஜெயிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள்தான் இந்த ‘அடியே’.
இருவேறு யூனிவெர்ஸ், இருவேறு பெயர்கள் என்ற போதிலும் காதலுக்காக ஏங்குவது, பல்லைக் கடித்து அழுவது, வானத்தைப் பார்த்துக் கத்துவது என்ற வழக்கமான டெம்ப்ளேட் உணர்ச்சிகளை எவ்வித வித்தியாசங்களும் இல்லாமல் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். குழப்பமான மனநிலையைச் சிறப்பாக வெளிப்படுத்தும் அவர், கனமான காட்சிகளிலும் அதே மனநிலையில் இருப்பது கதாபாத்திரத்தை விட்டு விலகிச் செல்ல வைக்கிறது. படம் முழுக்க பயணம் செய்யும் கதாநாயகி கௌரி ஜி.கிஷன் தான் ஏற்றுள்ள பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
ஆங்காங்கே வந்து போனாலும் வந்த இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு டைமிங் கலாய்களைப் போட்டு அப்லாஸ் வாங்குகிறார் வெங்கட் பிரபு என்கிற கௌதம் மேனன். இருந்தும் அவரை சயின்டிஸ்ட் என்று சொல்வது சற்றே அந்நியமாகத் தெரிகிறது. வாசிம் அக்ரமாக நாயகனின் நண்பராக வரும் மிர்ச்சி விஜய், காமெடி பந்தினை ஸ்டம்பை நோக்கி வீசியுள்ளார். அதில் சில ஸ்டெம்பைப் பதம் பார்த்து கிளிக் ஆகியிருக்கின்றன. மற்றொரு நண்பராக வரும் மதும்கேஷ்க்கு முகபாவனைகள், உடல்மொழிகளில் இன்னும் பயிற்சி வேண்டும்.
படம் ஆரம்பித்து பள்ளிப் பருவத்து முதல் காதல், ஏக்கம், மீண்டும் அதே காதல், அதற்குக் கவிதை எனப் பல கிளிஷேக்களை சில மணிநேரங்கள் உலாவ விட்டு ஒருவழியாக மைய கதைக்கு வந்து சேர்கிறார்கள். இதில் காதல் காட்சிகளுக்கு எழுதப்பட்ட வசனங்கள் எல்லாம் பெரும் சோதனை முயற்சி. ஆல்டர்நேட் ரியாலிட்டி என்று அடித்து ஆட வேண்டிய வித்தியாசமான கதைக்களத்தில், திரைக்கதையைச் சுவாரஸ்யமாக மாற்ற நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதீத செயற்கையான காதல் காட்சிகளை வைத்து வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறது திரைக்கதை அமைத்த விக்னேஷ் கார்த்திக் – கிஷோர் சங்கர் கூட்டணி.
ஒரு பிரபலத்தின் பெயரைச் சொல்லி அவர் பேரலல் உலகத்தில் வேறொரு தொழில் செய்கிறார் என்ற விஷயங்கள் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும் அதன் டோஸ் ஏற ஏற `தங்கதுரை ஒரு அளவுக்குத்தான்’ என்கிற ரகமாக மாறுகிறது. அதைத் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை ஜி.வி.பிரகாஷ், ஓர் இசையமைப்பாளராகத் திருடுவது, `கட்டிப்பிடி’ பாடலுக்கு அங்கே வேறு ஓர் அர்த்தம் இருப்பது சுவாரஸ்யமான ஐடியாக்கள்.
இம்மாதிரியான பேன்டஸி கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, அவர்களை லாஜிக்கை மறந்து கதையோடு பயணிக்கச் செய்ய வேண்டும். மாறாக எந்த காட்சியும் மனதில் நிற்காமல் மேம்போக்காகவே நகர்ந்து செல்கின்றன. ஒரு கட்டத்தில் குழப்ப மனநிலையில் இருக்கும் ஜி.வி.பிரகாஷைப் போலவே நாமும் குழப்பத்திற்கு வருகிறோம். இரண்டாம் பாதியில் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடி நம்மையும் திண்டாட வைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோ டவுன் பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்வது போல ஆல்டர்னேட் ரியாலிட்டிக்கும் நிஜ உலகத்துக்கும் சர் புர்ரென்று ஜாலியாக சென்று வருகிறார், அது இப்போது அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்ற சந்தேகத்தையும் வரவைக்கிறது.
“வாழ்க்கை என்பது யாதெனில்…” என்று படம் முழுக்க பின்னணியில் வரும் வசனங்கள் கிரிஞ்ச் ஊசிகள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இரண்டு பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் காட்சியில் வலுவில்லாததால் ‘நோ பாலில் விக்கெட் எடுத்தது போல’ எந்தப் பயனும் இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வரிகளை வைத்து வரும் பாடல், லவ் டுடே படத்தின் “சொல்லுங்க மாமா குட்டியை ஞாபகப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் ஒளி உணர்வு பிரமாதமாக இருந்தாலும், இருவேறு உலகினை வேறுப்படுத்துவதில் மெனக்கெட்டு இருக்கலாம்.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் கேமரா கோணங்களைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் அப்பட்டமாகத் தெரிகிறது. உதாரணத்துக்கு மிகவும் உணர்வுபூர்வமான காட்சிகளில் மட்டும் பயன்படுத்தும் குளோஸ் அப் மற்றும் டைட் குளோஸ் அப் ஷாட்களை எக்கச்சக்க இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் இருவேறு உலகங்களைக் கோர்த்த விதத்தில் படத்தொகுப்பாளர் முத்தயன் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். சாலையில் ஓடும் மெட்ரோ ரயில், பறக்கும் தட்டுகளைக் காட்டும் காட்சிகள் போன்றவற்றில் கிராபிக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் கீ போர்டை அடித்துத் தெறிக்க விடும் போது அதில் “Adiye” என படத்தின் டைட்டில் தெரிகிற மாதிரியான காட்சிகள் வரும். இது போன்ற “பயங்கரமான” கிரியேட்டிவிட்டிக்கு ஒதுக்கிய நேரத்தை ரைட்டிங் டேபிளில் மல்டிவெர்ஸ் ஐடியாவிலும் கொஞ்சம் செலவழித்து இருந்தால், “அடியே” கொஞ்சம் அடி வாங்காமல் தப்பித்திருக்கும்.