'ஒரே வாரத்தில் பெயர்ந்து வந்த சாலை; ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர்' – சாலையை பெயர்த்து புதிதாக போடும் நிலை

குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை ஒரு வார காலத்திற்குள் ஏடு, ஏடாக பிரிந்து வந்த அவலம் அரங்கேறியிருப்பதாக, பொதுமக்கள் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியதால், புதிதாக போடப்பட்ட அந்த சாலையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெயர்த்துவிட்டு, புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜல்லிகள் பெயர்ந்த சாலையோடு மக்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூர் ஊராட்சியில் இருக்கிறது மேல தாளியாம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவிலிருந்து, சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்துள்ளனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்தும், தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வந்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதியுற்று வந்துள்ளனர்.

ஜல்லிகள் பெயர்ந்த சாலை

எனவே, ‘புதிய தார் சாலை அமைக்க வேண்டும்’ என்று கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கியுள்ளார். இந்த நிதியில் இருந்து 670 மீட்டர் தூரம் வரை புதிய தார்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர்,

“எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்று மகிழ்ந்துபோனோம். ஆனால், புதிய தார்ச்சலையை அமைக்கும் பணியினை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அண்ணாதுரை, தார் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டார். ஆனால், அதன்பிறகு சாலையை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவும், அவர் 10 நாள்களுக்கு முன்பு தரமற்ற சாலையினை அமைத்தார்.

ஜல்லிகள் பெயர்ந்த சாலை

ஆனால், அப்படி போடப்பட்ட புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள், தோசை கல்லில் இருந்து தோசையைப் பிரித்து எடுப்பது போல் ஏடு, ஏடாக கையோடு பிரிந்து வந்தது. அதோடு, இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும்போது, தார் சாலை பெயர்ந்து பூமிக்குள் அமுங்கி அந்த இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இப்படி, புதிய தார் சாலை முறையாக போடாததால், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து இருந்தது. இதனால், அதிர்ச்சியான நாங்கள், ஒபந்ததாரரிடம் முறையிட்டும் அவர் தகுந்த பதிலை தரவில்லை.

இதற்கிடையில், இந்த பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை. சாலையின் தரத்தை ஆய்வு செய்யவும் இல்லை. அதேபோல், 670 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட வேண்டிய தார் சாலையை, 420 மீட்டர் தூரம் வரை தான் அமைத்தனர். இதனால், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தோம். அதன்காரணமாக, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்ததோடு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, அவர்களும் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.

பெயர்க்கப்பட்ட சாலை

பொதுமக்கள் சொன்னதுபோல் அந்த சாலை தரமற்று இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், ‘சாலையை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும்’ என்று அந்த ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர். இதனால், ஏற்கனவே போடப்பட்ட தார் சாலையை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் பெயர்த்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மறுபடியும் அந்த ஒப்பந்ததாரர் தரமான சாலையை போடுவாரா என்ற குழப்பத்தில் உள்ளோம். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுசெய்து, எங்கள் பகுதியில் தரமான சாலை அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தி.மு.க ஒப்பந்ததாரர் அண்ணாதுரையிடம் பேச முயன்றோம். முடியவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திடம் பேசினோம்.

“அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நெடுநாளைய பிரச்னையை தீர்க்கும் வகையில் சாலை அமைக்க எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினேன்.

மாணிக்கம் (குளித்தலை எம்.எல்.ஏ)

ஒன்றுமில்லாத பிரச்னையை அங்குள்ள அ.தி.மு.க நபர் ஒருவர் குறை சொன்னதால், அந்த சாலையை பெயர்த்தெடுத்துவிட்டு, அதற்காக மாற்று சாலை அமைக்கவும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். புதிய சாலையை அமைக்க ஆவண செய்துவிட்டார்கள். ஆனால், உள்ளூரில் உள்ள பொதுமக்கள் யாரும் இதை குறையாக சொல்லவில்லை. அங்குள்ள அ.தி.மு.க நபர் ஒருவர் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகிறார்” என்றார்.

இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் பேசினோம். “புகார் வந்ததும் நேரில் சென்று ஆய்வு செய்தோம். சாலையை தரமாகதான் போட்டுள்ளனர். ஆனால், பி.டி வொர்க் பண்ணும்போது, இரவில் வேலை செய்துள்ளனர். அப்போது, இன்ஜினீயர் அருகில் இருக்க வேண்டும். இது மட்டுமே விதிமீறல். மத்தபடி. சாலை தரமாகதான் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு பணம் தர வேண்டாம் என்றும் அவருக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளேன்.

பிரபுசங்கர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

தரமாக போடப்பட்ட சாலையில் அந்த ஒப்பந்ததாரரின் எதிர்தரப்பு நபர் ஒருவர் அதிகமாக நெல் மூட்டை வைத்து, அதிக எடை கொண்ட வாகனத்தை சாலையில் இயக்கியதால், லேசாக சேதம் அடைந்தது. இருந்தாலும், ஒப்பந்ததாரரை அந்த சாலையை பெயர்த்துவிட்டு, புதிதாக சாலை அமைத்து தர உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.