தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களுள் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் நெல்லையில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத் திருநாள் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர்ச் சித்தர் கோபம் தணிக்க அவருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/karur_chithar_3.jpg)
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கருவூர்ச் சித்தர், நாட்டின் பல்வேறு முக்கியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சைப் பெற்றார். இவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார். அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று இரவில் கருவூர்ச் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று ’நெல்லையப்பா…’ என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை.
கருவூர்ச் சித்தாின் பெருமையை உலகிற்கு உணர்த்துவதற்காக நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் கோபமடைந்த சித்தர், ”ஈசன் இங்கு இல்லை… எருக்கு எழுக” என நகைப்புடன் சாபமிட்டுத் திரும்பிச் சென்றார். உடனே அந்த இடத்தில் எருக்குச் செடிகள் முளைத்துக் கோயிலை மூடியது. சித்தரின் இந்தக் கோபம் சிவனையும் நடுங்கச் செய்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/karur_chithar_2.jpg)
கருவூர்ச் சித்தரைத் தேடிச் சென்றார் நெல்லையப்பர். கருவூரார் மானூரில் உள்ள அம்பலவாண சுவாமி கோயிலுக்குச் சென்றபோது அங்கு பேரொளியாய் வந்த நெல்லையப்பர் வழிமறித்துக் காட்சி கொடுத்தார்.
“அப்பனே, உனக்கு இத்தனை கோபம் ஆகாது. நீ என்னைக் காண வந்தபோது நைவேத்திய நேரம். அதனால் உன்னுடைய குரலுக்குச் செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று” என்று பக்குவமாய் சொன்னதும் கருவூரார் சமாதானம் அடைந்தார்.
பின்னர் கருவூர்ச் சித்தரை நெல்லைக்கு வருமாறு அழைக்கவே அவரும் சமாதானம் அடைந்து நெல்லையப்பரைப் பின்தொடர்ந்தார். அப்போது கருவூரார் நடந்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு வழங்கினார். அதனால் மகிழ்ந்த கருவூர்ச் சித்தர், தனக்கு இறைவன் காட்சி கொடுத்த ஆவணி மூலத் திருநாளில் ஒவ்வொரு வருடமும் காட்சி தரக் கேட்டுக் கொண்டார். அந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/karur_chithar_1.jpg)
அதன்படி, ஆவணி மூலத் திருநாளான நேற்று கருவூர்ச் சித்தரை அழைத்து வர சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாள் பாண்டியராஜா சண்டிகேஸ்வரர் தாமிரபரணி அம்பாள் அகத்தியர், குங்கிலிய நாயனார் ஆகியோா் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர். மானூர் அம்பலத் தெருவில் சுவாமி நெல்லையப்பர் கரூவூர்ச் சித்தருக்குக் காட்சி கொடுக்கும் நிகழ்வும் அதைத் தொடா்ந்து திருக்கோயில் அம்பலத்தில் ஒவ்வொரு அடிக்கும் பொன் கொடுக்கும் நிகழ்ச்சியும் திருவிளையாடல் ஓதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது.
நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூவூர்ச் சித்தர் தன் சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட இந்த நிகழ்வில் பக்தா்கள் குடும்பத்துடன் நெல்லையப்பர் சுவாமி – அம்பாள் மற்றும் கருவூர்ச் சித்தர் ஆகியோரை தாிசனம் செய்து வழிபட்டனர்.