புதுடில்லி:கருக்கலைப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருமணமாகாத 25 வயது பெண் ஒருமித்த உறவு வாயிலாக உருவான 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதித்து கடந்த ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பாரதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பதிவு செய்யப்பட்ட டாக்டர், பெண்ணின் கர்ப்பத்தை எப்போது கலைக்கலாம் என்பதை இந்த சட்டத்தின் 3வது பிரிவு தெரிவிக்கிறது. பதிவு செய்யப்பட்ட டாக்டர், பயிற்சி பெற்ற மகப்பேறு மருத்துவ நிபுணராக செயல்பட்டு கர்ப்பத்தை கலைப்பதற்கான பெண்ணின் மன நிலையை மதிப்பிட முடியாது’ என, வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பெண்களின் நலனுக்காக பார்லிமென்ட் சில சட்டதிருத்தங்களைச் செய்துள்ளது. ஆனால், பொதுநல வழக்கு என்ற பெயரில் கருக்கலைப்பு சட்டத்தை எதிர்க்கிறீர்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கக் கூடாது என கருதுகிறீர்களா? இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல. மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement