மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். இவருடைய முதல் திரைப்படமான ‘காக்கா முட்டை’ சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்று மணிகண்டனைக் கவனிக்கத்தக்க இயக்குநர் வட்டத்திற்குள் கொண்டு வந்தது. இதையடுத்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கியவர் கடைசியாக, ஒரு சிலரைத் தவிர உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களையே நடிக்க வைத்து ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை எடுத்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693043348_854_Untitled_design__94_.png)
குறிப்பாக, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயரை எதிர்த்து 16 பேர் உயிர்நீத்த பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லாண்டி என்ற 85 வயதான முதியவரைப் பிரதான கதாபாத்திரமாக நடிக்க வைத்தார்.
கடந்த 2021-ல் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் மக்களாலும், திரைப்பட விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. தற்போது சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. மேலும் படத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருது கிடைத்துள்ளது.
இதற்குப் படத்தின் இயக்குநர் மணிகண்டன் கடிதம் மூலம் நன்றியும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். முழுக்க முழுக்க உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டதாலும், முக்கிய கதாபாத்திரங்கள் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் படம் விவசாயத்தின் அருமையைப் பேசியதாலும் படம் தேசிய விருது பெற்றுள்ளதை உசிலம்பட்டி மக்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230825_WA0011.jpg)
இந்நிலையில் நல்லாண்டியின் சொந்த ஊரான பெருங்காநல்லூருக்கு சென்று அவரின் மனைவி செவனம்மாள், மகள் மொக்கத்தாயி, பேரன் செல்வம் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினோம்.
“விவசாயத்தை நேசித்த பெரியவர் அவர். தோட்டத்தில் வேலையில்லாத நேரங்களில் நூறு நாள் வேலைக்கும் செல்வார். அப்போது ஒரு நாள் சினிமாக்காரர்கள் சிலர் தன்னை போட்டோ எடுத்துச் சென்றதாகக் கூறினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230825_WA0013.jpg)
சில நாள்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து, பெரியவரை நடிக்க அழைத்தனர். முதலில் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். ஆனால் படம் விவசாயம் குறித்துப் பேசுகிறது எனக் கூறியதைத் தொடர்ந்து பெரியவரை நடிக்க அனுப்புவதற்கு ஒப்புக் கொண்டோம்.
படப்பிடிப்புக்குப் போனதும் முதலில் புரியாமல் தடுமாறிய பெரியவர், பிறகு என்ன கேட்கிறார்களோ அதற்கேற்றவாறு நடந்து கொண்டார். ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வாரத்திற்கு ஒருமுறை குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு நடிக்கச் சென்றார். தொடர்ந்து 4 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு கட்டத்தில் இடுப்புக்குக் கீழ் இயங்கச் சிரமமாக உள்ளது, படப்பிடிப்புக்குச் செல்லவில்லை எனக் கூறினார். ஆனால் அவரின்றி படம் இல்லை என்பதால் வைராக்கியமாகச் சென்று நடித்துக் கொடுத்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230825_WA0009.jpg)
அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே தவறிவிட்டார். ஊரிலுள்ள அங்கன்வாடி கட்டடத்தில் கூட அவரின் உருவம் வரையப்பட்டுள்ளது. டி.வி., பேப்பர், செல்போன் அனைத்திலும் அவரின் படங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது படத்துக்கும், அவருக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அனைத்துக்கும் இயக்குநர் மணிகண்டனும், துணை நடிகர் ராஜபாளையம் செல்வம் ஆகியோரும்தான் காரணம். அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!” என்றனர்.