திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வீரகார்திக் (வயது 19). இவர் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி .டெக் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்னர் தேர்வு எழுதுவதற்காக சிறுநாயக்கன்பட்டியில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்தார். கல்லூரிக்குள் செல்ல திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார் . அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று வீர கார்த்திக் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த, அவரை அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_25_at_17_22_34.jpeg)
பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மூளையில் இரத்தம் உறைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் உயிரிழந்தார். இது குறித்து அம்பாத்துரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
நான்கு வழிச்சாலையில் பேரிகார்டு எதுவும் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு முன்பாகவே அங்கு நான்கு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பேரிகார்டு வைக்க வேண்டியும், நடை மேம்பாலம், பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_25_at_17_22_34__1_.jpeg)
தகவல் அறிந்து அம்பாத்துரை போலீஸார் விரைந்து வந்தனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என போலீஸார் உறுதி அளித்தனர். கல்லூரி நிர்வாகத்திடம் பேசி இதற்கான கோரிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொண்டு போன பிறகு அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று கூறினர்.