"மதவெறியை தூண்டுறீங்களா".. கர்ஜித்த பொன்முடி.. அலட்சியமாக டீல் செய்த அண்ணாமலை.. முரட்டு சம்பவம்

நெல்லை:
தனது நடைப்பயணத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்திருக்கும் பதிலடி தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தில் தான் செல்லும் ஊர்களில் எல்லாம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.

அதுமட்டுமல்லாமல், ஐடி, அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கிய அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் குறித்தும் அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார்.

மதவெறியை தூண்டுறீங்களா..?
இந்நிலையில், அண்ணாமலையின் இந்த நடைப்பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், “ஒரு கட்சி இப்போ நடைப்பயணம் போயிட்டு இருக்கு. தினமும் 50 பேர்தான் நடைப்பயணத்தில போறான். வேற எந்த மூஞ்சியையும் புதுசா பார்க்க முடியல. இதுல பெருசா நடைப்பயணம் போறாராம். ஏன் நடைப்பயணம் போறீங்க.. தமிழ்நாட்டில் மதவெறியை தூண்டி விடுறதுக்கா? இங்கே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றாக இருக்கிறோமே.. அது உங்களுக்கு பிடிக்கவில்லையா?” என சரமாரியாக விமர்சித்து கேள்வியெழுப்பினார்.

பொன்முடிக்கு வயசாயிருச்சு:
இந்த சூழலில், பொன்முடியின் இந்த பேச்சு தொடர்பாக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அண்ணே.. நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். பொன்முடி, ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுபோன்ற ஆட்கள் பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது. அவங்களால எல்லாம் நடக்க முடியுமா? வயசாகி போச்சு பாவம். ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு அரசியல் செய்றாங்க. தமிழ்நாடு எப்படி மாறி போயிருக்குனு அவங்களுக்கு தெரியல.

முஸ்லிம் மக்கள் ஆதரவு:
23 நாட்களில் 183 கி.மீ. நாங்கள் நடந்திருக்கின்றோம். சராசரியாக ஒரு நாளைக்கு 9 கி.மீ. நடந்திருக்கின்றோம். ஜனவரி 11-ம் தேதி முடிகிற போது, தமிழ்நாட்டிலேயே அதிகமாக நடந்த கட்சியாக பாஜக இருக்கும். அதனால பொன்முடி போன்றவர்கள் எல்லாம் புரிஞ்சுக்கணும்.. இங்கே களம் மாறிவிட்டது. நடைப்பயணத்தின் போது எனக்கு பகவத் கீதையை விட அதிகமாக பரிசாக வந்தது பைபிளும், குரானும் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 27 பைபிள் வந்திருக்கு. 7 குரான் பரிசாக வந்துருக்கு.

அரசியல் மாறிவிட்டது:
செல்லும் இடங்களில் எல்லாம் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் எங்களை அப்படி வரவேற்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்குதான் பாஜகவை இந்துத்துவா கட்சி, இந்து கட்சி என சொல்லிட்டு வண்டிய ஓட்ட போறீங்க? உங்களுடைய அந்த அரசியலையும் இந்த நடைபயணம் உடைத்துவிட்டது.

பருப்பு வேகாது:
அதனால பொன்முடி அண்ணனை கொஞ்சம் ஏசி ரூமை விட்டு வெளியே வந்து பார்க்க சொல்லுங்க. தமிழ்நாட்டுல என்ன நடந்துகிட்டு இருக்குனு அப்போ தான் அவருக்கு தெரியும்.. கிராமங்களில் மக்கள் என்ன பேசிக்கிறாங்கனு போய் பார்க்க சொல்லுங்க. தமிழ்நாட்டில் அரசியல் மாறிவிட்டது; களம் மாறிவிட்டது. உங்க பழைய பருப்பு எல்லாம் வேகாது” என அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.