புதுடில்லி:’மரண வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான், கடந்த 2014ல் தன் மகன் இஸ்லாமுதீன், சகோதரர்கள் இர்ஷாத், நவுஷத் ஆகியோரை எரித்துக் கொன்ற வழக்கில், கடந்த எட்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இறந்த இர்ஷாத், நவுஷத் ஆகியோர் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அலகாபாத் நீதிமன்றம் இர்பானுக்கு தண்டனை அளித்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, பிரஷாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் மரணிக்கும் போது உண்மையே பேசுவார் என நம்பப்படுகிறது. மரண வாக்குமூலத்தில் கூறப்படும் தகவல்களை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம், அந்த மரண வாக்குமூலத்தை இந்த நீதிமன்றம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதும் இல்லை.
வெறும் மரண வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து தண்டனையை வழங்குவது நியாயமில்லை. சில வழக்குகளில், மரண வாக்குமூலத்துடன் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருக்கும். இறுதிகட்ட முடிவுக்கு வர வேண்டும் என்றால் ஓர் ஆதாரமாக கருதப்படும் மரண வாக்குமூலத்துடன், அது போன்ற உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
எப்போதுமே வழக்கு விசாரணையில் ஏற்படும் சந்தேகப்பலன், குற்றவாளிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே, மரண வாக்குமூலம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவருக்கு தண்டனை வழங்க முடியாது. இந்த வழக்கில், மரண வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையில் சந்தேகம் இருப்பதால் குற்றவாளியை விடுதலை செய்ய உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement