மீண்டும் ஃபார்முக்கு வந்த பிடிஆர்… அரசுக்கு சொன்ன பலே யோசனை – ஏற்பாரா முதல்வர்?

பி.டி.ராஜன், பழனிவேல் ராஜன் என திராவிடர் இயக்க அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பன்னாட்டு வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், தந்தை மறைவுக்குப் பின்னர் தமிழகத்திற்கு திரும்பி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அரசு பொறுப்பேற்றவுடன் மூத்த தலைவர்களில் யாரையாவது நிதியமைச்சராக நியமிப்பார் என நினைத்த நேரத்தில் முதல் முறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜனை நியமித்தார்.

நிதி விவகாரத்தில் கை தேர்ந்தவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் நியமித்ததாக தகவல் வெளியாகின. முதல்வர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த நிதிப் பிரச்சினைகளை சீராக்க பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அது பலனும் அளித்தது.

ஆனாலும், துறை ரீதியாக நிதி ஒதுக்குவதில் அவர் கறாய் காண்ப்பித்ததாகவும், முறையான காரணம் இல்லையெனில் நிதி ஒதுக்கவில்லை என்றும் இவர் மீது முதல்வரிடம் பல அமைச்சர்கள் புகார் வாசித்தனர். ஆனாலும், திறமையானவர் என்பதால் அவரை நீக்கவில்லை.

இதனிடையே உதயநிதி – சபரீசன் குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிதியமைச்சர் என்ற பவர்புல் துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு பிறகு பிடிஆரிடம் அமைச்சர்கள் யாரும் நெருக்கம் காட்டவில்லை. ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறைக்கான பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களில் தன்னை பிசியாக வைத்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருந்தாலும் தான் பிறந்த மதுரை மண்ணின் மீதான பாசப் பிணைப்பு அவருக்கு எப்போதும் இருக்கும். முகூர்த்த நாட்களில் தனது தொகுதி மக்களின் சுப நிகழ்வுகளில் கட்டாயம் கலந்துகொள்வார்.

இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் காணொலி ஒன்று வெளியாகி தன் தொகுதி மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..

தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் என்ற பந்தா எதுவுமில்லாமல் கேஷுவலாக உரையாடினார். அப்போது, 7ஆம் வகுப்பு மாணவன் மயக்கம் வருகிறது என சொல்ல, அவனுக்கு உணவு வழங்கச் சொல்லி, உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார். அப்போது, அமைச்சருக்கு புதிய யோசனை தோன்ற உடனே அதை பகிர்ந்துகொண்டார்.

அதனைத் தொடந்து அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களிடம், “1 – 5 வரை தனியாக உள்ள ஆரம்பப் பள்ளிகள் பற்றியும், 6- 12 தனியாக உள்ள பள்ளிகள் பற்றியும் பிரச்னை இல்லை. ஆனால், நடுநிலை பள்ளிகளில் 1- 5 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உணவு கிடைத்து மற்ற மாணவர்களுக்கு உணவு கிடைக்காத சூழல் உள்ளது. அதுபோல எத்தனை பள்ளிகள் உள்ளன” என்று கேட்டார்.

அதிகாரிகள் மொத்தம் 28 பள்ளிகள் உள்ளது எனக் கூற, “இந்த பள்ளிகளில் யாருக்கெல்லாம் சாப்பாடு கிடைக்கவில்லை என்று எண்ணிக்கை எடுத்து மாநகராட்சி மாமன்றத்தில் ஒரு தீர்மானம் போடுங்கள். நான் இந்த பள்ளிக்கு ஸ்பான்சர் செய்கிறேன். அதுபோல பொது ஆர்வலர்களிடம் இருந்து நிதி வாங்கி மற்ற பள்ளிகளுக்கும் இதை செய்ய முடியுமா என்று பாருங்கள். ஏன்னா ஒரே பள்ளியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காலை உணவு கிடைத்து மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நன்றாக இருக்காதல்லவா” என்று அறிவுறுத்தினார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறியுள்ள இந்த யோசனை நன்றாக உள்ளதெனவும், அரசு இதனை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கலாம் என்றும் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.