ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழாவிற்கு ஆளுநரான தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அழைப்பு விடுக்கவில்லை என்பது பெரும் விவாதமானது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தன்று, புதிய தலைமை செயலகத்தில் கோயில், மசூதி மற்றும் சர்ச் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளுமாறு அரசு சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதற்கு அவரும் சம்மதித்தார் என்பதால், முதலில் புதிய தலைமை செயலகத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வருகை தந்தார். அவரை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவரை முதல்வர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
அதன் பின்னர் தலைமை செயலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நல்ல போச்சம்மாள் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆளுநரும், முதல்வரும் மற்றும் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். பின்னர், ரிப்பன் வெட்டி தேவாலயத்தை (சர்ச்) திறந்து வைத்தனர். பின்னர், மசூதியில் பிராத்தனை நடந்தது.