அமராவதி:
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை மிகவும் தரக்குறைவாக பேசிய ஆந்திரா அமைச்சர் ரோஜா, இன்றைக்கு அதே ரஜினியின் சினிமா டயலாக்கை பேசி கைதட்டல் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, என்.டி. ராமராவையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் புகழ்ந்து பேசினார். ஹைதராபாத்தை மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றியது சந்திரபாபு நாயுடு தான் என அவர் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்ததால் ஆத்திரமடைந்த நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சருமான ரோஜா, ரஜினியை கடுமையாக விமர்சித்தார். “ஹைதராபாத் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு காரணம் அல்ல. முன்னாள் ராஜசேகர ரெட்டி தான் காரணம். ரஜினிக்கு ஆந்திரா அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியல் புரிதல் இல்லாமல் அவர் பேசியிருக்கிறார்” என்றார்.
இந்நிலையில், ஆந்திராவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பங்கேற்று பேசினார். அப்போது அவர், நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை விமர்சித்தார். அவர் பேசுகையில், “பவன் கல்யாண் ஊர் ஊராக சென்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி அவதூறுகளை பேசி வருகிறார். அதை பார்க்கும் போது ரஜினி ஒரு படத்தில் பேசிய வசனம் தான் நினைவுக்கு வருகிறது. குரைக்காத நாயும் இல்ல.. குறை சொல்லாத வாயும் இல்ல.. இந்த ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல என்ற வசனம்தான் பவன் கல்யாணுக்கு பொருந்தும்” என ரோஜா கூறினார்.
இதில் அவர் ரஜினி வசனத்தை அவரது ஸ்டைலில் தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் பேசினார். அதுவரை அமைதியாக இருந்த அரங்கம், ரஜினியின் பெயரை ரோஜா கூறியதும் கைதட்டல்களாலும், விசில்களால் அதிர்ந்தது. ரஜினி வசனத்தை ரோஜா பேசுவதை பார்த்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் உற்சாகம் அடைந்து சிரித்தார்.