சந்திரயான் -3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த மகிழ்ச்சியில் இஸ்ரோ உள்ளது. இதன் ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்களை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி குறைந்த செலவில் மிகப்பெரிய விண்வெளி சாதனையை படைத்து வல்லரசு நாடுகளுக்கு டஃப் கொடுத்திருக்கிறது இந்தியா.
இதன்மூலம் கிடைத்த உற்சாகத்தால் அடுத்தகட்ட திட்டங்களை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. அதில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 மிஷன் மிகவும் முக்கியமானது. இந்த செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் மொத்தம் 7 விதமான Pay Loads இடம்பெற்றிருக்கும். சூரியனை தொலைவில் இருந்தபடியே ஆய்வு செய்யவுள்ளது. அதாவது, ஹாலோ எல்1 என்ற சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்று ஆய்வை மேற்கொள்ளும். இதற்காக எல்.வி.எம்3 என்ற ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட உள்ளது.
ஹாலோ எல்1 சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும் இஸ்ரோவிற்கு தகவல் அனுப்ப தொடங்கிவிடும். சூரியனின் மேற்பகுதி எப்படி இருக்கிறது? அதிலிருந்து வெளிப்படும் வெப்பம்? சூரிய வெளிச்சம்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. மேலும் சூரியனின் மூன்று விதமான படலங்களை ஆய்வு செய்கிறது.
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ பிரத்யேகமாக அனுப்பப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவும், இந்தியாவும் புதிய மைல்கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.