புதுடில்லி: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த ஒரு வாரத்தில் நடந்தேறியுள்ளன. சந்திரயான்-3 வெற்றி, செஸ் உலக கோப்பையில் பைனலுக்கு சென்ற பிரக்ஞானந்தா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம், உலக தடகள தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் பைனலுக்கு முன்னேறி ஆசிய சாதனை நிகழ்த்தியது என வெற்றிகள் தொடர்வதாக பலரும் பாராட்டுகின்றனர்.
சந்திரயான்-3
இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தில் கடந்த ஆக.,23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற மகத்தான சாதனையை இந்தியா பெற்றது.
பிரக்ஞானந்தா
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா பைனல் வரை முன்னேறினார்.
செஸ் உலக கோப்பையில் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய இந்தியரானார். ஆக.,24ல் நடந்த பைனலின் ‘டை பிரேக்கரில்’ தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா, முதலிடத்தில் உள்ள நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதினார்.
அதில் 1.5-0.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வியுற்றாலும், இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முடிவில் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 20வது இடத்தை பிடித்தார்.
நீரஜ் சோப்ரா
அதேபோல், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், உலக தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, மானு, கிஷோர் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறியிருந்தனர். நேற்று (ஆக.,27) நடந்த பைனலில் நீரஜ் சோப்ரா, 88.17 மீ., எறிந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
தொடர் ஓட்டம்
இதே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 4×400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலுக்கு முகமது அனாஸ், அமோஜ் ஜாகப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் அடங்கிய இந்திய அணி 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து முதன்முறையாக தகுதிப்பெற்றது. மூன்று நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்த ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா இதன் மூலம் படைத்தது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த பைனலில் இந்திய அணி, பந்தைய துாரத்தை 2 நிமிடம், 59.92 வினாடியில் கடந்து 5வது இடம் பிடித்தது. இருந்தாலும் பைனல் வரை முன்னேறி, ஆசிய சாதனையை நிகழ்த்தியது அனைவரையும் பாராட்டில் ஆழ்த்தியது.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை. தொடர் வெற்றிகளால் இந்திய மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், இந்த வெற்றிகளுக்கு காரணமான விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்