வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெமோயின்: ”இந்தியா உடனான வலுவான உறவு, சீனாவிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெறுவதற்கு உதவும்,” என, குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி, 38, தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில், இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசுவாமியும் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், சவுத் கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பளராகும் போட்டியில் களத்தில் உள்ளனர்.
அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடந்த போட்டி விவாதங்களில் பங்கேற்ற விவேக் ராமசுவாமி, தன் திறமையான வாதத்தினால், மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்திய வம்சாவளியும், தமிழருமான விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பலரை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விவேக் ராமசுவாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா இன்று பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்துள்ளது. ஆனால் இந்தியா உடனான வலுவான உறவால், சீன உறவில் இருந்து விடுதலை பெறுவது எளிதாகிறது.
அந்தமான் கடலில் ராணுவ உறவு உட்பட இந்தியாவுடன் அமெரிக்கா வலுவான நல்லுறவை பேண வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவுக்கு வரும் பெரும்பாலான எண்ணெய் வினியோகத்தை மலாக்கா ஜலசந்தியில் இந்தியா நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும். எனவே, அமெரிக்க- இந்திய உறவில் முன்னேற்றத்திற்கான பகுதிகளாக இவை பார்க்கப்படுகின்றன.
இதுவே அமெரிக்க நலனுக்கு உகந்தது என்று நினைக்கிறேன். அதற்கேற்ப அமெரிக்காவை நான் வழி நடத்துவேன். இந்தியாவின் மிக சிறந்த தலைவராக உள்ள நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றி, இருநாட்டு உறவை வலுப்படுத்துவதே என் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement