ஆப்கானிஸ்தான் நாட்டில், பேண்ட்-இ-அமிர் என்று அழைக்கப்படும் தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது என தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் செல்லக் கூடாது; பணிக்குச் செல்லக்கூடாது என்று அறிவித்த தாலிபான் அரசு, தலை முதல் கால் வரையிலும் தங்களது உடலைப் பெண்கள் மூடி மறைத்து ஆடை அணிய வேண்டும் என உத்தரவிட்டது.
அதேபோல் ஜிம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்லவும் தடை விதித்தது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து தீவிர அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் நிலையில், தாலிபான்களின் செயலுக்கு உலகளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
எனினும், மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாலிபான் அரசு, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, ஆப்கானிஸ்தானின் மத்திய பாமியான் மாகாணத்தில் உள்ள பாண்ட்-இ-அமீர் என்னும் தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பூங்காவுக்குச் செல்லும் பெண்கள் பலரும் ஹிஜாப் அணிவதில்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தாலிபான் அமைச்சர் முகமது காலித் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் தேசியப் பூங்காவான பாண்ட்- இ- அமீர், அந்த நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.