கனக சபாபதி – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் – அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்

வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்…

(பச்சை விளக்கு படத்தின் பாடல்)

தன்னுடைய ரேடியோவில், இந்த பாடலை கேட்டுக்கொண்டே தனது வறண்ட நிலத்தில் அங்கே அங்கே இருக்கும் சிறு கதிர்களை பார்த்து சிரித்து கொண்டு, அந்த சேற்று புழுதியில் கால்களை தழுவிய வாறு, கிழிந்த வெள்ளை கதர் சட்டையும், இரண்டு பொத்தான்கள் பிஞ்ச நிலையில், பின்னாலே மண் தடயம் கொண்டு வேஷ்டியும், வழுக்கையான தலையும், சோர்ந்த போன முகமும், நம்பிக்கையான மனதும் கொண்ட 75 வயதான சபாபதி.. தனிமையில் ஏதோ சிந்தனை செய்து கொண்டே, பாடலை ரசித்து கொண்டு இருக்க…

அவருடைய போன் அடிக்கிறது, மெதுவாக, தனது நிலத்தில் இருந்து கையை தடவி, தன் லங்கோடில், ஒரு பிளாஸ்டிக் பையில், மொபைல் போன்ஐ சுற்றி வைத்து இருந்தார்.. தனது கையால், அதை மெதுவாக திறந்து எடுப்பதற்குள், போன் கட்டாகிவிட்டது..

யார் அழைத்தது என்பதை பார்ப்பதற்கு, தன் உள் சட்டையில் இருந்த பழுப்பு கண்ணாடியை எடுத்து மாட்டி கொண்டு, மிகவும் நுணுக்கி பார்த்தார், காரணம் கண்ணாடியில் ஒரு புறம் கண்ணாடி உடைந்து இருக்க, ஒரு பக்க கண்ணாடி மட்டுமே மிச்சம்… அதற்குள் மீண்டும், அதே கால் வர, போனை எடுத்ததும்…

Representational Image

ஹலோ, யாருங்க நான் சபாபதி பேசுறேன்…

மறுபுறத்தில்,

அய்யா, உங்கள எத்தனை தடவ கூப்படறது…எங்க இருக்கீங்க ? மதியத்துலேந்து, உங்கள காணல, போனும் எடுக்கல…கனகு அக்காக்கு, முடியாம இருக்கு.. ஹாஸ்பிடல் போகணும்…உடனே புறப்பட்டு வாங்க… இல்லைனா எங்க சொல்லுங்க, நான் பைக் எடுத்துட்டு வரேன். மாணிக்கம் கிட்ட சொல்லியிருக்கேன், ஆட்டோ வந்தரும்…. வேகமா வாங்க… உங்க சைக்கிள் எடுத்துட்டு வரதெல்லாம் இப்போதைக்கு ஆகாது….

என்று பேச பேச…

சபாபதிக்கு பதட்டம், உள்ளே இருந்தாலும், பேச்சில் காண்பிக்க வில்லை…

சரியா, சொன்னதுக்கு நன்றி…நான் வரேன்… அது வர பாத்துக்க…

அய்யா, உங்க சைக்கிள் வந்து என்னைக்கு சேர்றது…உங்கள பாக்காம, அக்கா வீடு படிய கூட தாண்ட விடல…கொஞ்சம் சீக்கிரமா வாங்க…

நான் பாத்துக்கிறேன் முருகேசா…

போன் கட் செய்து விட்டு நேரத்தை பார்க்க முற்பட்டபோது, சார்ஜ் இல்லாமல் போன் ஆப் ஆகிவிட்டது.. கண்ணாடியை கழட்டி விட்டு, மெதுவாக எந்திரிக்க, கால் தடுமாறி கீழே சறுக்கி தனது நிலத்தில் உள்ள சேற்றில் விழுந்தார்..

வெள்ளை வேஷ்டி, காவி யானது….தலை முதல், கால் வரை சேர் படாத தடம் இல்லை… எழ முற்பட்டபோது, கால் சறுக்கி விடுகிறது… அதில், மிச்சம் ஒட்டி கொண்டு இருந்த கண்ணாடி அங்கே சிதறி உடைந்தது.. குழந்தை போல், கைகளை மண்ணில் ஊனி கொண்டே, தட்டு தடுமாறி எந்திரித்து, தனது சைக்கிள் நோக்கி நடக்க, நடக்க சிறு தூரமும் நெடுந் தூரமாய் தோன்றுகிறது…

Representational Image

கால் விரலில் கற்கள் பட்டு ரத்தம் வழிகிறது, வலி தெரிய வில்லை… கண்களில், வழிதோண்டும் கண்ணீர் துளிகள் இருந்து, பெரிதாய் வளர்கிறது…. தனது சட்டையில் கண்களை தொடைத்து கொண்டே வேகமா போக, வேஷ்டி அங்கே அவிழ்தந்தும் தெரியவில்லை..நடை வேகமானது, கண்ணீர் அதை விட வேகமாய் வந்து கொண்டு இருந்தது…

தனது 45 ஆண்டு கால திருமண வாழ்க்கை துணை, தன்னை தனியாய் இன்றுடன் சொல்லாமல், விட்டு சென்று விடுவாளோ என்ற பயம்.. கடைசி நிமிடங்கள், அவளுடன் வேண்டும், வாழ்ந்த நாட்கள் அசை போட கூட நேரம் இல்லை… நேரத்தை கடன் வாங்க முடியாதே என்ற ஏக்கம், கடவுள் மீது கோவம், நேரத்தின் மீது கோவம்.. தன் மீதும் கோவம்.. அவளோட ஏன் ஒரு வாரமாய் சரியாக பேசவில்லை… இந்த வயதிலும், சிறு கோபம்… ஏனோ இந்த அழகிய ஊடலில் காதல் தொலைந்தது…இருக்கும் பொழுது, கொண்டாடவில்லை…

வலியின் உச்சத்தில் சபாபதி, வீட்டை நோக்கி வேகமாக சைக்கிள் மிதித்து கொண்டே சென்றார்…

நான் வரும் வரை, இரு கனகு…. இந்த ஜென்மத்தில் ஏனோ விட்டுட்டேன், அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு ராணியடி…காத்திரு..போயிடாத கனகு…. வந்து கிட்டே இருக்கேன்… .நிறையா பேசுனும்டி, உன் மடியில கொஞ்ச நேரம் தூங்கணும் கனகு..என்ன மன்னிச்சிரு ஆத்தா…என்ன மன்னிச்சிரு….நமக்கு பிள்ளை இல்லை, அதை ஒரு நாள் நினச்சும் கவலை பட்டதில்லை, என் ஆத்தா கூட பார்த்ததில்லை… நீ தாண்டி எல்லாமே… தெரியாமே, ஏதோ வறட்டு கௌரவம், நீ பேசவந்தும் கண்டுக்கல…எப்போ, நான் பேச வறேன்யா..தனியா இந்த உலகத்தில என்ன மட்டும் விட்டு போயிடாத கனகு…..

புலம்பி கொண்டே, சைக்கிள் வேகமாக செல்ல முற்பட்டது…பாவம் அந்த சைக்கிள் தெரியாது, அவசரம் என்ன வென்று…அதன் வேகம் அவ்வளவுதான்… ஓங்கி மிதித்தால், சட்டென்று நொறுங்கி விடும்…

Representational Image

செருப்பு இல்லாமல், வேகமாக சைக்கிள் பெடலை மிதித்து கொண்டே போனார் சபாபதி… சைக்கிள் செயின் திடீர் என்று கழண்டு போக.. கால் தடுமாறி, பாலன்ஸ் செய்ய முடியாமல் தவறி கீழே விழுந்ததும், மறு நொடி டக்கென்று சைக்கிள் தூர போட்டு விட்டு, அந்த வெயிலில், வெறும் காலோடு தட்டு தடுமாறி ஓடுகிறார் சபாபதி… அவர் சென்ற தடயம் எல்லாம், அங்கங்கே, சிறு ரத்த கறைகள் தெருவில்…

அவர் கட்டிய வேஷ்டி மறந்தது, வெறும் லங்கோடு, முழுதாக கிழிந்த சட்டை, அதில் பொத்தானும் இல்லை… கால் நொண்டி கொண்டே, அந்த சுடும் வெயிலில்..சேற்றின் துளிகளும், ரத்தமும், வயதின் தொய்வும், ஓட்டத்தை தடுமாற வைக்கிறது… கால்களை தடவி கொண்டே…ஓடுகிறார்… அவர் கண்களில், காதலும், சோகமும்.. அதை விட பயமும் தொற்றி கொண்டு, வலியின் உச்சத்தில் கண்ணீரை ஓடுகிறது…. இருந்தும் முடிந்த வரை ஓடுகிறார் சபாபதி, தனது கனகுக்காக…

வாழ்க்கையில, நிறையா வறுமை, வேதனை, கஷ்டம். எப்போதும் நீதானா என் கூட இருந்த…ஒரு தடவ கூட நூல் சேலை தாண்டி ஏதும் கேட்டதில்லையே….மருந்து வாங்க காசு இல்லாட்டி, உன் மடியில படுத்துகிட்டு, நெத்தில சின்ன முத்தம் தருவியே கனகு… அது வேணும் எனக்கு இப்போ…ஹையோ…. ஹயோ…என்று கதறி அழுகிறார் சபாபதி…

அய்யா, ராசா, சாமி, இதை தவிர தமிழ்ல வேற அழகான வார்த்தையே கிடையாது…

இதை தாண்டி எந்த வார்த்தையிலும் நீ என்ன கூப்பிட்டதில்லை…

நான் வரேன் கனகு… வரேன்.. பக்கத்துல வந்துட்டேன்… போயிடாத….

இந்த அறுபதை தாண்டறப்போ மட்டும், ஏன் இந்த காதல் வரணும்…

சிறு தூரம் ஓடிக்கொண்டு போக, அங்கே அவரை கண்டதும் முருகேசன் ஓடி வந்து,

அய்யா என்ன அய்யா… என்ன ஆச்சு..இப்படி அடி பட்டருக்கு..அங்கே சில பேரை கை அசைத்து, டேய் இங்க வாங்க.. கொஞ்சம் சபாபதி அய்யாவை பிடிங்க…தண்ணி கொண்டு வாங்க…சில பேர் அங்கே இருந்து ஓடி அருகே வர…

Representational Image

சபாபதி அய்யா…

முருகேசா, என்னப்பா ஆச்சு என் ஆத்தா கனகுக்கு…..யாராவது சொல்லுங்க சாமீ…

கனகு..என்னாச்சு..என்னாச்சு. கனகு…கனகு…கனகு…..என்று முனகி கொண்டே அவர்கள் தோள் மீது மயக்கம் ஆகிறார் சபாபதி…

எல்லோரும், தூக்கி கொண்டு, அருகே இருந்த வீட்டுக்கு போனதும்..அய்யா, அய்யா..தண்ணி தெளிக்க..ஒன்னும் பயனில்லை… மெதுவாக தோளில் இருந்து இறக்கியதும், நிலை தடுமாறி கீழே விழுகிறார் சபாபதி…. எல்லோரும், எழுப்ப முயற்சி செய்ய பலன் இல்லை.. கடைசியாக, எந்த இடத்தில் அவரது மனைவி கனகு விட்டு சென்றாரோ, அதே இடத்தில் அவளது புகைப்படம் மாட்டிய சுவரில் கை வைத்து கொண்டே, அவளது புகைப்படத்தோடு… அவள் நினைவில் கலந்து விட்டார் சபாபதி…

அந்த புகைப்படத்தில் சிறு கடிதம்,

“பேசக்கூடிய வாய்ப்பு இருந்தும், பல தருணங்கள் பேசல..பேசணும் நினைக்கற அப்போ, இல்லை.. கூடஇருக்கறப்போ அருமை யாருக்குமே தெரியறதில்லை….

யாருக்காவது, யார்கிட்டயாவது கோவமா, சண்டையை…பேசிடுங்க…பேச நினைக்கற அப்பல்லாம் பேசிடுங்க, திரும்ப அதே நேரம் கிடைக்குமா தெரியாது”

இது, கனகு, சபாபதிக்காக வைக்கப்பட்டது….

ஒரு வருடத்திற்கு முன்….

கனகு இறந்த நாள் இன்று…, சின்ன தொரு வாக்குவாதம். கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை என்பது சகஜம். அது ஒரு ஊடல்… சண்டைக்கு காரணம் இல்லை…பேசவில்லை இருவரும்… அவள் இறந்து விட, அவளிடம் பேசாமல் விட்டதை நினைத்து, சபாபதி இன்றும் அவள் தன்னுடன் இருக்கிறாள் என்ற நினைவில்… தனிமையில் பேச, சிரிக்க… அவர் உலகத்தில்… அவரை தெரிந்தவர்கள், யாரும் அவரை தனியே விடுவதில்லை…

ஒரு வருடம் ஆனது.. 

அதே, தேதியில்..அன்று நடந்தது போல் முருகேசனிடம் பேசுவது போல் எண்ணி கொண்டு, தட்டு தடுமாறி, பல வித அடிகளும், காயங்களும் கொண்டு, அவளிடம் எப்படியாவது பேச வேண்டும்.. என்று பயணத்தில்… அவள் நினைவோடு, சபாபதி…

எழுத்தும், கற்பனையும்

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.