மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் ஹரேகாவ் என்ற கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 4 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொடங்க விட்டு அடித்து சித்ரவதை செய்வது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்த வீடியோ குறித்து தெரிய வந்தவுடன் போலீஸார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் 6 பேர் சேர்ந்து ஆடு மற்றும் புறாக்களை திருடியதாக குற்றம் சாட்டி பட்டியலினத்தை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 4 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து சித்ரவதை செய்தது தெரிய வந்தது.
அவர்களை அடித்து சித்ரவதை செய்தவர்களில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி அடித்தவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற 5 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அடிபட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அதோடு சம்பவம் நடந்த கிராமத்தில் பந்த்-க்கு அழைப்பு விடுத்து இருந்தனர். தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் ஒரு ஆடு மற்றும் நான்கு புறாக்களை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி பிரதீப் தோரட் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேரிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.