மகளிர் உரிமைத் தொகையில் முக்கிய தளர்வு: கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளதால் பலரும் பயன்பெற உள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி!திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் நிதி நிலைமை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் தொடர்ந்து அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் தள்ளிப் போய் வந்தது. இந்த சூழலில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு முழுவதும் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு!தகுதியுள்ள பெண்கள் என்றால் அனைவரும் இந்த திட்டத்தால் பயன்பெற முடியாதா என்ற கேள்வி எழுந்தது. அனைவருக்கும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியுள்ளவர்கள் என்று கூறுகிறார்கள் என்று எதிர்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தன. செப்டம்பர் முதல் மார்ச் வரை இந்த நிதி ஆண்டில் 7000 கோடி இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மாதம் ஒரு கோடி பெண்கள் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தகுதியுள்ள பெண்கள் யார்?தகுதியுள்ளவர்கள் யார் என்பதை கணக்கிட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது, அரசு ஊழியர்களாகவோ, ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது. ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரத்துக்கு அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது!தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு கோடி பேருக்கு மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் அரசு அறிவித்த தகுதியுள்ளவர்களுக்கான நிபந்தனைகளில் வருபவர்கள் கூட பயன்பெற முடியாமல் போய்விடுமோ என்ற சூழல் உருவாகியது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினும், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் தகுதியுள்ள ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!பயனாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கையான ஒரு கோடி என்பதை அதிகரிக்காமல் தகுதியானவர்கள் அனைவருக்கும் திட்டத்தை கொண்டு சேர்க்க முடியாது என்று கூறப்படுகிறது. இதை முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் குறையாமல், அதைவிட அதிகமாகத்தான் வரும் என்று இன்றைக்கு கணக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சென்று சேரப்போகிறது” என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பயனாளர்கள் எண்ணிக்கை!​​
எனவே தகுதியானவர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக சென்றால் அரசு அதற்காக மேலும் நிதி ஒதுக்கத் தயாராக உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் தான் பயனாளர்களாக சேர்க்கப்படுவோமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை, கட்டாயம் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.