கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு பல நிர்வாகக் குளறுபடிகள் நடைபெறுவதை கண்டு ஆவேசம் அடைந்தார். உடனடியாக, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிக்கு போன் போட்ட மா. சுப்பிரமணியன், மருத்துவமனை டீனை மாற்றுமாறு உத்தரவிட்டார்.
தமிழக சுகாதாரத் துறை மீது அண்மைக்காலமாக பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் வந்தபடி இருந்தன. சிகிச்சையில் அரசு மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவது; பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது போன்ற பல புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தன. இதில் பல சம்பவங்கள் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் பல மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று கூட நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்தார் மா. சுப்பிரமணியன். அப்போது பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தலைமை மருத்துவருக்கு போன் போட்டு லெப்ட் ரைட் வாங்கினார். மேலும், மருத்துவர்கள் அரை மணிநேரத்தில் இங்கு இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்றார். அமைச்சர் வருவதை எதிர்பாராத மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டு மற்றும் அறைகளுக்கு சென்று மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் பல வார்டுகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதையும், சில வார்டுகள் செயல்படாமல் இருப்பதையும் கண்டு மா. சுப்பிரமணியன் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து, மருத்துவமனை டீனிடம் இதுகுறித்து அவர் விசாரித்தார்.
பின்னர், மாவட்ட சுகாதார அதிகாரிக்கு போன் போட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து பாருங்க. இங்க புதுசா தொடங்குன ஒரு வார்டே இல்லாம இருக்கு. மேனேஜ்மென்ட் சுத்தமாக சரியில்ல. நீங்க இங்க வந்து ரெண்டு நாள் தங்கி ஆய்வு பண்ணுங்க. டீனை உடனே மாத்துங்க. வேற நல்ல ஆளா பார்த்து டீனா போடுங்க” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.