மத்தியப் பிரதேசத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வாபஸ் பெறக் கோரி, அவரின் சகோதரரை அடித்துக் கொன்ற கும்பல், இளம்பெண்ணின் தாயாரை நிர்வாணமாக்கி கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்ட 18 வயது இளம்பெண்ணின் சகோதரருக்கும் வழக்கைத் திரும்பப் பெறுமாறு சிலர் அழுத்தம் கொடுத்ததாக, அவர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இத்தகைய தாக்குதலை அந்தக் கும்பல் அரங்கேற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு தலித் சமூகத்தைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் (அப்போது சிறுமி), அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693130348_949_WhatsApp_Image_2023_08_14_at_16_06_00.jpeg)
அது தொடர்பாக வழக்கு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கைத் திரும்பப் பெற வற்புறுத்திப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் 20 வயது சகோதரனை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தக் கும்பலிடமிருந்து தன்னுடைய மகனைக் காப்பாற்ற, அவரின் தாயார் முயன்றிருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இளைஞரின் தாயாரை நிர்வாணமாக்கி, தாக்கிச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார், ஒன்பது பேர்மீது கொலைக் குற்றம் சுமத்தி, வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மேலும், மூவர்மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இதுவரை எட்டு பேர் இந்த விவகாரம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாக, போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“அவர்கள் என் மகனை மிகவும் மோசமாகத் தாக்கினார்கள். அவனால் உயிர்பிழைக்க முடியவில்லை. பின்பு எனது ஆடையை அவர்கள் அகற்றினார்கள். போலீஸார் வந்து என்னிடம் ஒரு துண்டு கொடுத்தனர். அவர்கள் எனக்கு ஒரு புடவையைக் கொடுக்கும் வரை, நான் ஒரு துண்டுடன் நின்றேன்” என, கொல்லப்பட்ட இளைஞரின் தாய் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர், அரசு தரப்பில் உதவிகள் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/01/6b80b823-e715-42cb-b482-d559571aba8d.jpg)
மேலும், குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட தகவலையும் அவர்களிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே கொலையான இளைஞரின் உடலைப் பெற்று, அவரின் உறவினர்கள் இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஆளும் பா.ஜ.க அரசை மிகக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. ஆனால், “சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே வீண்பழி சுமத்துகின்றன” என ஆளும் பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/FpteOoFaEAIE7TL.jpeg)
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மத்தியப் பிரதேசத்தில் தலித் மற்றும் பழங்குடியினர்மீதான ஒடுக்குமுறை தடையின்றி தொடர்கிறது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் விகிதத்தில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. பா.ஜ.க மத்தியப் பிரதேசத்தைத் தலித் அட்டூழியங்களின் ஆய்வகமாக மாற்றியிருக்கிறது” என பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY