புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கத்துவா அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த பலகையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதியுள்ளார். இதைக் கண்டித்து மாணவரை அடித்து உதைத்தவர்களில் ஆசிரியர் கைதாகி, பள்ளியின் முதல்வர் தலைமறைவாகி உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைந்த கத்துவா மாவட்டத்தின் பானியில் ஓர் அரசு பள்ளி உள்ளது. இதன் 10 ஆம் வகுப்பின் கரும்பலகையில் கடந்த வெள்ளிக்கிழமை, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என ஆன்மிக வாசகம் எழுதப்பட்டிருந்தது.
வகுப்புக்கு வந்த பள்ளியின் உருது ஆசிரியரான பரூக் அகமது, இதைக் கண்டு கடும் கோபம் அடைந்துள்ளார். இதை எழுதிய மாணவர் நீரஜ் குமாரை அழைத்து கண்டிக்கும் வகையில் கடுமையாக அடித்து, உதைத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
பிறகு அந்த மாணவர் நீரஜை பள்ளியின் முதல்வர் முகம்மது ஹாபீஸிடம் அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளார். இதைக் கேட்ட முதல்வர் ஹாபீஸும் அம்மாணவரை அடித்து, உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இருவரது கண்மூடித்தனமானத் தாக்குதலால், மாணவர் நீரஜுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த உள்ளூர்வாசிகள் பலரும் பானியின் அரசுப் பள்ளிக்கு வந்து தம் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சில இந்துத்துவா அமைப்புகள், மாணவர் நீரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊரவலமும் நடத்தினர். இதையடுத்து பானி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி ஆசிரியர் பரூக் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை அறிந்து கைதுக்கு அஞ்சிய பள்ளி முதல்வர் ஹாபீஸ், தலைமறைவாகி விட்டார். அதேசமயம், கத்துவா மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பவத்தை விசாரிக்கு உதவி ஆட்சியர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் அப்பகுதியின் மாவட்ட கல்வி நிர்வாக உதவி அதிகாரி மற்றும் அருகிலுள்ள மற்றொரு அரசுப் பள்ளியின் ஆசிரியர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தம் அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் அளிக்க வேண்டி கத்துவாவின் ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.