மும்பை தாராவியில் வசிப்பவர் ருக்ஷானா ஷேக். இவர் வீட்டில் ஆசையாக இரண்டு முயல்களை வளர்த்து வந்திருக்கிறார். ருக்ஷானாவும், அவரின் குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்த போது அதிகாலையில் முயல் கத்தும் சத்தம் கேட்டு ருக்ஷானாவின் இளைய மகன் எழுந்தார். அவர் பேட்டரி லைட் மூலம் என்ன சத்தம் என்று சமையல் அறைக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்கு பின்புறம் ஒரு பெரிய பாம்பு படுத்திருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ருக்ஷானாவின் மகன் வீட்டில் உள்ளவர்களை எழுப்பினார். அவர்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தனர். அதுல் காம்ப்ளே என்பவர் வந்து பாம்பை பிடித்தார்.
பாம்பு சிறிது நேரத்திற்கு முன்புதான் வீட்டில் இருந்த முயல் ஒன்றை சாப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. பாம்பின் வயிற்றுக்குள் முயலின் நகர்வு தெளிவாக காணப்பட்டது. பிடிபட்டது ஒரு வகையான மலைப்பாம்பு ஆகும். அதன் எடை 14 கிலோ இருந்தது. மழை காலம் என்பதால் மலைப்பகுதியில் இருந்து கீழே வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/103097046.webp.jpeg)
அதோடு ருக்ஷானாவின் வீடு மித்தி ஆற்றையொட்டி இருக்கிறது. எனவே ஆற்றில் மிதந்து வந்த பாம்பு ருக்ஷானாவின் வீட்டு சுவரில் இருந்த சிறிய துளி வழியாக உள்ளே நுழைந்திருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு முன்புதான் சாப்பிட்டு இருந்ததால் பாம்பு அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்திருந்தது.
மலைப்பாம்பை சோதித்து விட்டு அதனை மீண்டும் மலைப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். மலைப்பாம்பு பிடிபட்டது குறித்து ருக்ஷானா கூறுகையில், “எங்கள் வீட்டில் யாருக்கும் இன்னும் பயம் விடவில்லை. பாம்பு பிடிபட்ட பிறகு வீட்டில் யாருக்கும் உறக்கமே வரவில்லை. எனது இளைய மகன் வீட்டுக்கே வரமறுத்தான். அவன் பள்ளிக்கு கூட போகவில்லை” என்று தெரிவித்தார்.