வேலை தேடுறீங்களா? : 14 கோடி புதிய வேலைவாய்ப்புகள் – அதிரடியாக பேசிய பிரதமர் மோடி

ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா மூலம் பல ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்ற ரோஜர் மேளாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 51,000 க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன கடிதங்களை பிரதமர் வழங்கினார். சிஆர்பிஎப் உள்பட மத்திய பாதுகாப்பு காவல் படைகளில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் சமீபத்திய படங்களை தொடர்ந்து அனுப்புகின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புதிதாக பணியில் சேரும் நீங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான பயணத்தைத் தொடங்குகிறீர்கள் என்று வாழ்த்து தெரிவித்தார்.

விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும் கூறினார். பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதாகவும், 2030ம் ஆண்டுக்குள் சுற்றுலாத் துறை 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை அளிக்கும் என்றும், இதன் மூலம் 13-14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் கூறினார்.

ஓடோடி உதவிய பிடிஆர் : அந்த மனசுதான் சார் கடவுள்.. துயரத்திலும் உருகிய உ.பி மக்கள்!

கடந்த ஆண்டு இந்தியா ஏற்றுமதியில் சாதனை படைத்தது. உலக சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்ததன் அறிகுறியாக இது உள்ளது. இதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, அதன் மூலம் குடும்பத்தின் வருமானம் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும் சாதாரண மக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் அவர் கூறினார்.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது என்றும், இந்தியாவில் மொபைல் போன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை வாங்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதன் விளைவாக உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அரசு மற்றும் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் பணியில் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் எனது மிகப்பெரிய பலம் என்றும், அரசு ஊழியர்கள் என்ற வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், அரசு ஊழியர்களாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த புரிதலுடன் செயல்பட்டால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நிறைய உதவிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.