கமல் ஹாசன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று மகாநதி.
1994 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை சந்தானபாரதி இயக்கி இருந்தார். கமலுடன் இணைந்து சுகன்யா, எஸ்.என். லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுதியிருந்தார். இந்த படம் வெளியானபோது அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது. படம் வெளியாகி 29 ஆண்டுகளைக் கடந்து இருந்தாலும் இன்றுவரை அனைவராலும் பாராட்டக்குரிய படமாக மகாநதி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த மகாநதி படம் குறித்து வெயில், அங்காடி தெரு, காவியத் தலைவன், சமீபத்தில் வெளியான அநீதி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப்பதிவில், “ நேற்றிரவு முழுக்க மகாநதி திரைப்படம் மனதிற்குள் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அந்த ஹனீபா கதாபாத்திரத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தேன். நேரடி பிஎஸ் வீரப்பா நம்பியார் டைப் வில்லன் இல்லை. உறவாடி சிரித்து நகைந்து நயந்து இளித்து இசைந்து கெடுக்கிற கதாபாத்திரம். அதை ஹனீபா வாழ்நாள் கதாபாத்திரமாக உள்வாங்கி வாழ்ந்திருந்தார்.
வாழ்க்கை என்கிற மகாநதியில் எத்தனை ஹனீபாக்கள் எத்தனை கிருஷ்ண(ஆ)சாமிகள். ஒரு கிருஷ்ணசாமி அழிந்து நாசமாகும் போது இன்னொரு கிருஷ்ண(ஆ)சாமி தோன்றுவான் ஒரு ஹனீபா அழியும் போது இன்னொரு ஹனீபா தோன்றுவான். பேராசை ஏமாற்றப்படலாம் ஆனால் நியாயமான ஆசைகள் கொண்ட கிருஷ்ணசாமி ஏமாற்றப்படுவது தான் இன்று வரை நம்மை அந்த கதையோடு அடையாளப்படுத்த முடிகிறது. தன்னிடம் வேலை செய்யும் யாரோ தன் மகள்களை கடத்தி சென்று விடுவார்கள் என்கிற துர்க்கனவு தோன்றியதன் விளைவாகவே மகாநதி கதை எழுதியதாக கமல் அவர்கள் ஏதோ ஒரு பேட்டியில் கூறினார்.
இந்த திரைப்படத்தில் தான் எத்தனை கதைகள் ? ஒருவனை ஆசை வார்த்தைகள் காட்டி அவன் வியாபாரத்தை வாழ்க்கையை துண்டு துண்டாக அழிப்பது அவன் வெகுண்டெழுந்து பழி தீர்த்தானா இல்லையா? மோசடியில் சிக்கி சிறை சென்ற ஒருவன் சிறைக்குள் இன்னும் பல்வேறு துயரங்களை சந்திக்கிறான்.அந்த சிறையின் துயரில் இருந்து தன்னை மட்டுமல்ல மற்ற கைதிகளையும் அவன் எப்படி விடுவித்தான் என்பதும் மகாநதியில் இருக்கிறது.
விடுதலையாகி சிறையில் இருந்து வெளிவந்தவன் தொலைந்து போன தன் மகனை, தன் மகளை, தன் வாழ்க்கையை எப்படிதேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதும் மகாநதியில் இருக்கிறது. மோசடியில் சிக்கி சிறை சென்ற ஒருவன் சிறைக்குள் இன்னும் பல்வேறு துயரங்களை சந்திக்கிறான். அந்த சிறையின் துயரில் இருந்து தன்னை மட்டுமல்ல மற்ற கைதிகளையும் அவன் எப்படி விடுவித்தான் என்பதும் மகாநதியில் இருக்கிறது
விடுதலையாகி சிறையில் இருந்து வெளிவந்தவன் தொலைந்து போன தன் மகனை, தன் மகளை, தன் வாழ்க்கையை எப்படிதேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதும் மகாநதியில் இருக்கிறது. தன் மகளை விபசார விடுதியில் விற்றவனை தேடி கதாநாயகன் வதம் செய்வதும் மகாநதியில் இருக்கிறது. மகாநதியில் எல்லா ஆறுகளும் கலந்திருப்பது இயல்பு தானே. அந்த மகாநதி கூவமாக ஓடிக் கொண்டிருப்பதன் கவலையும் கரிசனமும் வெளிப்படுகிறது. மகாநதி இன்றும் தனித்து ஒளிரக் காரணம் அதன் சீர்மை.
இன்றைய ஆக்சன் சினிமாவில் இந்தக் கதையில் இருக்கிற ஒரு கதையைக் கொண்டே முழுப் படம் எடுக்கப்பட்டு விடுகிறது. கமல் அவர்களின் படங்களுக்கு எப்போதும் ஒருவித சிக்கல் இருக்கும். அவரது கதாநாயகத் தன்மை, வணிகத் திரைப்படங்களின் வெற்றிகள் வாயிலாக எழுந்து வருகிற சாகசத்தன்மை கொண்ட கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்கள் மனதில் பேருருவாய் எழுந்து நிற்கும்.
அந்த சூப்பர் ஹீரோத்தன்மை எளிமையான கதாபாத்திரங்கள் நடிக்கும் போது பெரும் தடையாக மாறும். கமல் அடிவாங்கும் போது கமல் தோற்கும் போது ரசிக மனம் துவண்டு தோற்றுப் போகும். தன்னை தனித்துவமாக மாற்ற மாறுபட்ட கமலாக காட்ட முயல இந்த ரசிக மனங்களை சமன்படுத்துகிற குழப்புகிற நிலைப்பாட்டை கமல் அவர்கள் மாறி மாறி விளையாண்டு பார்ப்பார்.
தன் கதாநாயகத் தன்மையை அழித்து அழித்து தன்னை பற்றி புது உருவத்தை வரைய முற்படுவது கோடிகளுடன் அவர் விளையாடும் ஆபத்தான விளையாட்டு. அவருக்கு ஆபத்தான விளையாட்டு தான் சுவாரஸ்யமான விளையாட்டாக இருக்கிறது. அந்த விளையாட்டு தான் கமல் என்கிற மகா கலைஞனை உருவாக்கியது” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.