வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சிறை துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் திறந்த கழிப்பறை, பூச்சிகள் நிறைந்த சிறை அறையில் இம்ரான் கான் அவதி அடைந்து வருகிறார் என தகவல் வெளியாகியது.
அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் முன்னாள் பிரதமராக இருந்தும், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த ஒரு சிறிய அறையில் உள்ளார் என அவரது தரப்பினர் குற்றம் சாட்டினர்.
சிறைத்துறை தலைமை ஆய்வாளர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், பேன், குரான் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், ப்ளாஸ்க், பேரீச்சம்பழம், தேன், நறுமண பாட்டில்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
டாக்டர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்துள்ளார். இம்ரான் கானுக்கு சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement