Asia Cup 2023: 50 ஓவர் வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் நாளை (ஆக. 30) உள்ளது. இதில், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நோபாளம் ஆகிய ஆறு அணிகள் ஒருநாள் போட்டி வடிவில் விளையாட உள்ளன. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் போட்டி வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது.
இந்த ஆறு அணிகளில் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் ‘ஏ’ குரூப்பிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘பி’ குரூப்பிலும் இடம்பிடித்துள்ளன. இதில், நாளை தொடங்கும் குரூப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இரண்டு குரூப்பிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள் மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். பின்னர், அதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கும் செப். 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும். குரூப் சுற்று, சூப்பர்-4 சுற்று, இறுதிப்போட்டி என மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், நான்கு போட்டிகள் பாகிஸ்தானின் முல்தான் மற்றும் லாகூரில் நடக்கின்றன. மற்ற போட்டிகள் இலங்கையின் கண்டி மற்றும் கொழும்பில் நடக்கின்றன.
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறும் பெரிய தொடரான ஆசிய கோப்பை தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், வரும் செப். 2 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை கண்டியில் எதிர்கொள்கிறது. இந்த தொடர், நட்சத்திர இந்திய பேட்டர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த ஜோடி சச்சின் டெண்டுல்கரின் மறக்கமுடியாத சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் ஆசிய கோப்பையில் (ODI) மொத்தம் 971 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மறுபுறம், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 745 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், விராட் 613 ரன்களுடன் 12ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆசிய கோப்பையில் (ODI) அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்துவதற்கு விராட்டுக்கு 358 ரன்களும், ரோஹித்துக்கு 226 ரன்களும் தேவைப்படும். விராட் மற்றும் ரோஹித் அவர்களின் தலைமுறையின் சிறந்த பேட்டர்களாக இருக்கிறார்கள். மேலும் ஆசிய கோப்பை 2023 தொடரில் அவர்கள் சிறப்பமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளை மனதில் வைத்து ஆசிய கோப்பை ஒரு முன்னோட்ட தொடராக இந்திய அணிக்கு அமைந்துள்ளது.