தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் ’விடியல் பயணத் திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள்இதனை மலைப் பகுதியில் உள்ள பெண்களுக்கும் விரிவுபடுத்த ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். கொரோனாவிற்கு பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பெரிதும் வரவேற்கக் கூடிய விஷயம். இந்த சூழலில் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.காலி பணியிடங்களை நிரப்புதல்இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தொடர்பாக சில விஷயங்களை அமைச்சர் பேசினார். அதாவது, பணிக்கு வராத பணியாளர்களை அழைத்து பேச வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி பணிக்கு தவறாமல் வருகை தந்து பேருந்துகளை இயக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகள்இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறையின் நிலை, கருணை அடிப்படையிலான பணி நியமன எண்ணிக்கையை அதிகரிக்க உள்ள சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.கூடுதல் வருவாய்க்கு வித்திடல்அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்கு அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையகங்கள், மின்சார செலவை குறைக்க மேற்கொள்ளப்படும் சூரிய மின் தகடுகள் நிறுவுதலின் தற்போதைய நிலை குறித்த ஆய்வை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பயணிகளின் பாதுகாப்புஅரசுப் போக்குவரத்து கழக உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேடு தொடர்பாக நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக உயிரிழப்பு விபத்துக்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து, அதை வெகுவாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பயணச்சீட்டு முன்பதிவு வசதிதொலைதூர பேருந்து பயணிகள் அனைவரும் இருக்கையை உறுதி செய்து பயணித்திடும் வகையில் பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு வசதியை தேர்ந்தெடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயணிகள் உதவி எண் மூலம் பெறப்படும் மக்களின் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து, அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
பேருந்துகளின் பழுதுகளை சரிசெய்தல்மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித சிரமும் இன்றி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள பழுதுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ், சிறப்பு செயலாளர் வெங்கடேஷ் ஐஏஎஸ், கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.