சென்னை:
கொசுவை விரட்டுவதற்காக பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஆல் அவுட் திரவத்தை குடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. அதே சமயத்தில், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் தான், குழந்தைகள் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கைக்கு எட்டும் பொருட்களை எடுத்து வாயில் போடவும் முயற்சிக்கும்.
இந்த சமயத்தில்தான் நிறைய விபத்துகளும் நிகழும். அப்படி ஒரு பரிதாப சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது. சென்னையை அடுத்த மணலியில் உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், லட்சுமி என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே, இன்று காலை பாலாஜி வேலைக்கு சென்றதை அடுத்து, வீட்டில் நந்தினியும், குழந்தை லட்சுமி மட்டுமே இருந்தனர். அப்போது நந்தினி செல்போனில் தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை அவருக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், வேறு விளையாட்டு பொருளை எடுப்பதற்காக குழந்தை அருகில் இருந்த அறைக்கு சென்றுள்ளது.
ஆனால், நீண்டநேரமாகியும் குழந்தை வராததால் சந்தேகமடைந்த தாய் நந்தினி, அந்த அறைக்கு சென்று பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்து கிடந்துள்ளது. அருகில் ஆல் அவுட் கொசு விரட்டி திரவமும் இருந்துள்ளது. குழந்தையின் வாய் அருகே நுகர்ந்து பார்த்த போது, ஆல் அவுட் திரவத்தின் வாசம் வந்துள்ளது.
இதை பார்த்து அலறிய நந்தினி, உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. வீட்டில் சாதாரணமாக நாம் வாங்கி வைக்கும் ஆல் அவுட் கொசு விரட்டி திரவம், குழந்தையின் உயிரையே குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.