புதுடெல்லி: இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இவ்விஷயத்தில் பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நான் லடாக் சென்றிருந்தபோது உள்ளூர் மக்களும் இதைத் தெரிவித்தார்கள். சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது என நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். ஆனால், பிரதமர் என்ன சொல்கிறார்? ஒரு இன்ச் நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என அவர் தெரிவிக்கிறார். அவரது இந்த கருத்து முற்றிலும் தவறானது.
அருணாச்சலப் பிரதேசத்தையும், அக்சய் சின் பகுதியையும் சீனா தனது வரைபடத்தில் இணைத்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். இது மிகவும் முக்கியமான பிரச்சினை. சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதி உதவி வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு இன்று துவக்குகிறது. மைசூரில் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் நோக்கில், ராகுல் காந்தி டெல்லயில் இருந்து புறப்பட்டு கர்நாடகா வந்துள்ளார்.