மும்பை: மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்ததன் நோக்கத்தை அனைவரும் அறிவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக சகோதரிகளைப் புறக்கணித்த அவர்கள், ரக்ஷா பந்தனுக்காக இப்போது சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறீர்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுவின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ‘இண்டியா’ கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரேவிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்கு பலர் இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் மோடியை தவிர வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.