திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையாவதால் வேறு வழியின்றி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, இடையகோட்டை, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, அம்பிளிகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டம், கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. தற்போது முருங்கைக்காய் சீசன் என்பதால் ஒட்டன்த்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. தற்போது ஒரு கிலோ கரும்பு மற்றும் செடி முருங்கை ரூ.7-க்கும், மர முருங்கை ரூ.6-க்கும் விற்பனையாகிறது. அதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் சிலர் முருங்கைக்காயை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். சிலர் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயி பிரகாஷ் கூறியதாவது: எங்கள் பகுதியில் அதிகளவில் முருங்கை சாகுபடி நடக்கிறது. தற்போது சீசன் என்பதால் வரத்து அதிகரித்து, விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.10-க்கு விற்றால், பயிரிட்ட செலவு, பராமரிப்பு செலவு, பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது. இதனால் சிலர் முருங்கைக்காய்யை பறிக்காமல் விட்டுள்ளனர். என்னைப் போல் சிலர் தங்கள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகின்றனர்.
முருங்கைக்காய்க்கு நிலையான விலை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முருங்கை பவுடர் தயாரித்து விற்பனை செய்ய ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு சார்பில் முருங்கை பவுடர் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என்று கூறினார்.