ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் கையிலெடுக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்!

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ஓபிஎஸ் – அதிமுக

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ஓ.பி.எஸ் சேர்க்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009 ஜூலை 30-ம் தேதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்ஸின் சொத்து மதிப்பு  ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 374 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது. 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி பெரிய கருப்பையா விசாரித்து வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். பல்வேறு கட்டங்களைக் கடந்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதன்பின், திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தன. 2012 அக்டோபர் 27-ம் தேதி தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றார்.

ஓ.பி.எஸ்

அதைத் தொடர்ந்து சிவகங்கை நீதிமன்றத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கும்விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்’ என்றது அந்த அறிக்கை. அதன் அடிப்படையில், இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2012-ம் ஆண்டு ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து மேல்முறையீடு செய்து, விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், தற்போது நான்காவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.