சென்னை: “சென்னையில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்பதை முழுமையாக மறைத்துவிட்டனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்பதை முழுமையாக மறைத்துவிட்டனர். அதை மறைத்துவிட்டு, காலை சிற்றுண்டி திட்டம் என்று எழுதுகின்றனர். உங்களது முகத்துடன் உங்கள் திட்டத்தின் பெயர் பலகையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதற்காக எம்ஜிஆரின் புகழை அரசு மறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.