“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்பு சென்னை செல்ல விமான நிலையம் வந்தவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு வழங்கினீர்கள். மாநாட்டு செய்திகளை மக்களிடம் சென்று சேர்த்ததற்கு நன்றி. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு உங்களை இப்போது சந்திக்கிறேன்” என்றவரிடம்.
“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுங்குகிறது என்று திமுக நாளிதழ் குறிப்பிட்டுள்ளதே?” என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசிய போது ஸ்டாலின் என்னிடம் விவாதிக்க வேண்டியது தானே. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில், அது தொடர்பான வழக்கு நடைபெற்றது அதிமுக ஆட்சியில். ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக வழக்கறிஞர். இவர்களுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தது திமுகவினர்.
கொலை குற்றவாளிக்கும், திமுகவைச் சேர்ந்த ஜாமீன் தாரருக்கும் என்ன சம்பந்தம்? கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாத காரணத்தாலேயே வழக்கு தாமதம் ஆனது. ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மீண்டும் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்படுவது ஏன்?
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொடும் குற்றம் புரிந்தவர்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஏன் திமுகவினர் ஜாமீன் வாங்க வேண்டும். கொரோனாவால் தான் வழக்கு தாமதம் ஆனது. வழக்கு 90 சதவிகிதம் முடிந்த நிலையில், வேற வழி இல்லாமல் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதை அடிக்கடி வெளியிடுகிறார்கள்.
நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று. திமுக அரசின் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றால் சி.பி.ஐ-க்கு விசாரணையை மாற்ற கேளுங்கள்.” என்றவரிடம்,
“நீங்கள் பதறுவதாக திமுகவினர் கூறுகிறார்களே?” என்ற கேள்விக்கு,
“நான் பதறவில்லை. பலமுறை அறிக்கை வாயிலாக சொல்லிவிட்டேன். பேட்டியின்போதும் கூறிவிட்டேன். நீங்கள் ஏன் அந்த ஜாமீன்தாரரை விசாரிக்க மறுக்கிறீர்கள். அப்போதுதானே உண்மை வெளிவரும். கொடும் குற்றம் புரிந்த கேரள மாநில குற்றவாளிகளுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் ஏன் ஜாமீன்தாரராக இருக்கிறார்கள்?” என்றார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, “காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் குரலை அதிமுக நாடாளுமன்றத்தில் ஒலித்தது. ஆனால், திமுக குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்ற போகிறார்களாம். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக போகிறார்களாம். பெங்களூரில் இந்தியா கூட்டணி ஆலோசனையின் போது துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் காவிரி பிரச்னையை பேச வேண்டியது தானே. அதற்கு தானே கூட்டணி.
அதிமுக எப்போதும் அடிமை கிடையாது. அதிமுக எப்போதும் எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது. திமுக-வில் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே நோக்கம், மக்கள் நலன் அல்ல. ஸ்டாலினுக்கு மக்களை, விவசாயிகளை பற்றி கவலையில்லை. டெல்டாகாரன் என வசனம் பேசியவர், நெல் பயிர் எல்லாம் கருகிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை டெல்டாகாரன் என ஏற்றுக்கொள்வோம்.
பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? கூட்டணி அமைத்து அமைச்சரவை பெற்ற போது திமுகவுக்கு பாஜக இனித்தது, இப்போது கசக்கிறதா? கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளில் பாஜக அரசிடம் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்பவே கூட்டணி அமைக்கப்படும்.
நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து என் மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொண்டு என் மீது குற்றமில்லை என நிரூபித்தேன். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திமுக-வினரைப்போல `ஐயோ நெஞ்சு வலிக்கிறது’ என போய் மருத்துவமனையில் படுக்கவில்லை.
நீட் விவகாரத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சும் என திமுக மாறுபட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீட் எனும் அரக்கனை கொண்டு வந்ததே திமுக ஆட்சி காலத்தில் தான். அதனால் தான் இவ்வளவு பிரச்னைகளும்.
தேர்தல் பயத்தில்தான் மகளிர் உரிமை தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் தூங்கி கொண்டிருந்தார்கள். இந்த ஆட்சியில் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த கொந்தளிப்பை அடக்கவே திமுக நடித்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.