சசிகலா ரிட்டர்ன்ஸ் – ஓபிஎஸ், டிடிவி அப்செட்? எடப்பாடி அடிக்கும் சூப்பர் சிக்ஸர்!

அதிமுகவின் வாக்கு வங்கியில் தென் மண்டலத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். சசிகலாவையும் டிடிவி தினகரனையும் வெளியேற்றிய பின்னர் தென் மண்டலத்தில் குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக பெரியளவில் இழந்ததாக கூறுகின்றனர். இந்த வாக்குகள் தினகரனின் அமமுக பக்கம் நகர்ந்ததால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அந்தப் பகுதிகளில் பல இடங்களில் தோல்வியைத் தழுவியது.

டெல்டாவிலும் பலவீனமாகிறதா அதிமுக?இத்தனைக்கும் அந்த சமயம் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருந்தார். ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாகிறது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளன. ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் நீக்கப்பட்டுள்ளதால் டெல்டா பகுதியிலும் அதிமுகவுக்கான வாக்குகள் குறையும் என்கிறார்கள்.

எடப்பாடிக்கு மன வருத்தம்!அதிமுக தெற்கில் பலவீனமாகிறது என்ற பேச்சை மாற்றிக் காட்டுவதற்காகத் தான் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அந்த மாநாடு கட்சியினர் மத்தியில் எடப்பாடியின் கிராஃபை சற்று உயர்த்தினாலும் கட்சிக்கு வெளியே நிற்கும் அதிமுக அபிமானிகளின் கவனத்தை எடப்பாடி பக்கம் ஈர்க்க தவறிவிட்டது என்கிறார்கள். மாநாட்டின் நோக்கமே அதுதான் என்கிற போது அது நடக்காதது எடப்பாடிக்கு வருத்தம் தான் என்கிறார்கள்.
மதுரை மூவர்!ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோரை மட்டும் வைத்து தென் மண்டல வாக்குகளை பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி சில முக்கிய முடிவுகளை எடுக்க தயாராகிவிட்டாராம். எடப்பாடி பழனிசாமி கையில் அதிகாரம் வந்ததிலிருந்து தோல்வி மேல் தோல்வி என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அதை கொஞ்சமாவது மாற்றிக் காட்ட வேண்டும் இல்லையேல் கட்சி கரைவது கண் முன்னே தெரிய ஆரம்பித்துவிடும் என்பதால் இறங்கிவர தயாராகிவிட்டாராம்.
எடப்பாடியுடன் டீல் பேசும் சசிகலா தரப்பு!டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் மீண்டும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதே சமயம் சசிகலா குறித்து கொங்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து எடப்பாடியுடன் பேசிவருகிறாராம். சிறையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏதும் பேசாமல் உள்ளார் சசிகலா. அவர் சார்பில் அவரது சகோதரர் திவாகரனும் பேசிவருவதாக ஏற்கெனவே தகவல்கள் வந்தன.
தென் மண்டல வாக்குகள்!“ஜெயலலிதா காலத்தில் இருந்த சசிகலா இப்போது இல்லை. மிகவும் சாந்தமாகிவிட்டார். தினகரனுடனும் அவருக்கு பேச்சுவார்த்தை இல்லை. அவர் எதிர்பார்ப்பது ஆட்சி அதிகாரத்தை அல்ல, கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு. அந்த வகையில் அவரை கௌரவ ஆலோசகர் என்ற அளவில் நாம் அழைத்து நம்முடன் சேர்த்துக் கொண்டால் நமது வாக்கு வங்கி மீண்டும் வலுவடையும். முக்குலத்தோர் சமூக வாக்குகளை பிரிப்பதில் தினகரன், ஓபிஎஸ் ஆகிய இருவரைவிடவும் சசிகலா வலிமையானவர்.
‘துரோக’ விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!​​
இதைவிட முக்கியமான ஒன்று உள்ளது. சசிகலா வந்தால் நம் மீதான பல விமர்சனங்கள் முடிவுக்கு வந்துவிடும். சசிகலாவிடம் பதவி பெற்று அவருக்கு துரோகம் செய்துவிட்டார் பழனிசாமி என்று தானே ஒரு விமர்சனத்தை தினகரன், ஓபிஎஸ் கூறி வருகின்றனர். சசிகலாவை நாம் சேர்த்துக் கொண்டால் அந்த விமர்சனம் மொத்தமாக அடிபட்டுவிடும். அவர்கள் கட்சி நடத்துவதற்கான காரணமும் காலாவதியாகிவிடும்” என்று அந்த மாஜி கொங்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளாராம். எடப்பாடியும் இந்த மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் விரைவில் தலைகீழ் மாற்றம் நடக்கும் என்றும் கூறுகிறார்கள் அதிமுக உள்விவகாரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.