அமைசர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆகிறது. நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 28) அவர் தரப்பில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.,எம்.பிக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி ரவி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார். ஜாமீன் மனுவை ஏற்கனவே வழக்கை விசாரித்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.
இதனால் செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று (ஆகஸ்ட் 29) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி அல்லி ஜாமீனை சிறப்பு நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
குழந்தைகளின் சாட்சியங்கள் பல வழக்குகளில் இன்றியமையாத சாட்சிகளாக மாறிப்போயிருக்கிறது
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) எம்.எல்.ஏ.,எம்.பிக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆஜராகினர். அப்போது நீதிபதி ரவி, உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்கலாமா என்று உயர் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுவர அறிவிறுத்தியுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.
முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என மாறி மாறி அலைக்கழிக்கப்படும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.