தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அண்ணாமலை

கோவை: மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் பெருவிழா 4-வது நாள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நொய்யல் படித்துறையில் நடைபெற்ற தீப ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர், முன்னதாக காவடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன், திரைப்பட நடிகை கஸ்தூரி, பாஜக மாநில விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும். அம்ருத் திட்டத்தின் கீழ் போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டால் தொழில் நகரமான கோவைக்கு பல்வேறு பயன்களை தரும்.

எனது அடுத்த கட்ட பாதயாத்திரை செப்டம்பர் 4-ம் தேதி மேற்கு மண்டலத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியை துறை ரீதியாக ஒதுக்கீடு செய்த பட்டியல் வெள்ளை அறிக்கையாக 24 மணி நேரத்தில் வெளியிடப்படும், என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.