தமிழகத்தின் தலைமைச் செயலகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாகவும், தமிழக அரசு சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் எனவும் ஆசைப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டத்தை கட்டினார்.
2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தலைமைச் செயலக கட்டடத்தை, அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி அறிவித்தது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், மருத்துவமனையாகவே தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் இன்று கடிதம் எழுதியுள்ளனர். அதில், “தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகத்தின் பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத சூழல் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயகரமான சூழல்தான் உள்ளது. பணியாளர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் பெரிய பிரச்னையாக உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் அனைத்து தளங்களிலும் நடுவில் மாற்றுத் திறனாளிகளின் கழிவறை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து அசுத்தக் காற்று வெளியேற வழி இல்லாததால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
234 சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து சட்டமன்றக் கூட்டத்தினை நடத்துவதற்கான இடவசதி என்பதும் சவாலாகவே உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சட்ட மேலவை அமைக்கப்பட்டால் அதற்கான இட வசதி என்பதும் இயலாத காரியமாக உள்ளது. போதிய இட வசதி இல்லாததால் அமைச்சர்களால் துறை ரீதியான கூட்டங்கள் நடத்துவது சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் கருணாநிதி ஓமந்தூரர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை கட்டினார் என்றும் அடுக்கியுள்ளனர்.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒமந்துாரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.கடுமையாக இடநெருக்கடியோடு பல்வேறு இடர்பாடுகளை பல ஆண்டுகளாக சந்தித்து வரும் தலைமைச் செயலகப் பணியாளர்களின் இடரினை போக்க தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகம் இடமாற்றம் அல்லது புதியதாக தலைமை செயலகம் அமைத்தல் குறித்த அரசின் கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.